அமெரிக்க குடியேற்றம் தொடர்பாகப் புதிய உத்தரவு இன்று வெளியாகும்

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வோர், குடியேற்றம் பெற விரும்புவோர் தொடர்பான புதிய உத்தரவில் அதிபர் டிரம்ப் இன்று திங்கள்கிழமை

வாஷிங்டன்: அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வோர், குடியேற்றம் பெற விரும்புவோர் தொடர்பான புதிய உத்தரவில் அதிபர் டிரம்ப் இன்று திங்கள்கிழமை கையெழுத்திடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க உள்துறை அமைச்சக வட்டாரங்கள் இது தொடர்பாகத் தெரிவித்ததாவது:

பணி புரிதல், கல்வி, அகதிகளுக்குப் புகலிடம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வோருக்கான புதிய குடியேற்ற உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை கையெழுத்திடுவார்.

கடந்த ஜனவரி மாதம் வெளியான உத்தரவில் சிக்கல் ஏற்படுத்திய சில விதிமுறைகள் புதிய உத்தரவில் சரி செய்யப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும், புதிய உத்தரவில் உள்ள விவரம், அதிபரின் திங்கள்கிழமை அலுவல்கள் குறித்த விவரம் எதையும் வெள்ளை மாளிகை உறுதி செய்யவில்லை.

ஈரான், இராக், யேமன், சிரியா, சூடான், லிபியா, சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் வருவதற்கு 90 நாட்கள் தடை விதிக்கப்பட்டது.

அதைத் தவிர, அந்த நாட்டு அகதிகள் அமெரிக்கா வர 120 நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக சிரியாவைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்கா வருவதற்கு கால வரையறையின்றித் தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

குடியேற்றம் தொடர்பாக அந்த உத்தரவு சர்ச்சையைக் கிளப்பியது மட்டுமல்லாமல், அமெரிக்காவிலும் அதற்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

சிக்கல்கள் இல்லாத புதிய குடியேற்றக் கொள்கையை விரைவில் வெளியிடுவேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

இந்த நிலையில், புதிய குடியேற்றக் கொள்கை குறித்து உத்தரவு இன்று திங்கள்கிழமை கையெழுத்தாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com