ஃபுகுயி அணு மின் நிலையத்தை மீண்டும் இயக்கலாம்: ஜப்பான் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஜப்பானின் ஃபுகுயி அணு மின் நிலையத்தில் இரு அணு உலைகளின் செயல்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
ஃபுகுயி அணு மின் நிலையத்தை மீண்டும் இயக்கலாம்: ஜப்பான் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஜப்பானின் ஃபுகுயி அணு மின் நிலையத்தில் இரு அணு உலைகளின் செயல்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
ஜப்பானின் ஃபுகுயி மாவட்டத்தில் அமைந்துள்ளது தகஹாமா அணு மின் நிலையம். தலைநகர் டோக்கியோவுக்கு மேற்கே 350 கி.மீ. தொலைவில் உள்ள அந்த மின் நிலையத்தில் பாதுகாப்பு தொடர்பான அச்சம் காரணமாக இரு அணு உலைகளை மூடுமாறு மாவட்ட நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.
அந்த அணு மின் நிலையத்தை உருவாக்கிப் பராமரித்து வந்த கன்சாய் மின் நிறுவனம், மாவட்ட நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து ஒசாகா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
அந்த முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்றம், தகஹாமா அணு மின் நிலையத்தில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன; எனவே அவை செயல்படத் தொடங்கலாம் என்று தீர்ப்பில் தெரிவித்தது.
அங்கு 3-ஆம் எண் உலையும், 4-ஆம் எண் உலையும் செயல்பட மாவட்ட நீதிமன்றம் விதித்த தடை செல்லுபடியாகாது என்றும் அந்தத் தடையை நீக்குவதாகவும் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை கன்சாய் மின் நிறுவனம் வரவேற்றுள்ளது. அணு மின் உற்பத்திக்கான தடை நீக்கப்பட்டதையடுத்து, விரைவில் மின் உற்பத்தி தொடங்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.
மின் உற்பத்திக்கான இயற்கை வளம் குறைவாக உள்ள ஜப்பான், அணு மின் சக்தியையே பெரும்பாலும் நம்பி வந்தது. இந்த நிலையில், 2011-ஆம் நிகழ்ந்த சுனாமி தாக்குதலையடுத்து ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் பெரும் விபத்து ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து அந்த நாட்டில் உள்ள அனைத்து அணு மின் நிலையங்களும் மூடப்பட்டன.
எனினும், நிலக்கரி, எண்ணெய், எரிவாயு ஆகியவற்றைக் கொண்டு நாட்டுக்குத் தேவையான அனைத்து மின்சார உற்பத்தியையும் மேற்கொள்ள ஜப்பானில் போதுமான இயற்கை வளங்கள் இல்லை. பெரும்பான்மையான அளவில் அந்த எரிபொருள்களை இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது. மேலும் அந்த வகையான மின் உற்பத்தி சுற்றுச்சூழல் மாசுக்கும் வழி வகுக்கிறது.
இந்த நிலையில், மீண்டும் அணு மின் உற்பத்தியைத் தொடங்குவதில் பிரதமர் ஷின்úஸா அபே தீவிரம் காட்டி வந்தார். ஆனால் சில உள்ளூர் எதிர்ப்புகளும், உள்ளாட்சி அமைப்பு மற்றும் கீழமை நீதிமன்றங்களின் தடை உத்தரவுகளும் அரசின் மின் உற்பத்தி திட்டங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி வந்தன. ஆயினும், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி, உயர் நீதிமன்றங்கள் மத்திய அரசுக்கு சாதகமான தீர்ப்புகளைப் பல்வேறு சமயங்களில் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றங்களின் அனுமதியின் அடிப்படையில் வெவ்வேறு அணு மின் நிலையங்கள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டாலும் வெகு சில அணு மின் நிலையங்களில் மட்டுமே உற்பத்தி நடைபெறுகிறது.
இயற்கை வளம் குன்றிய ஜப்பான், அணு சக்தி மூலமாகத்தான் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தி என்ற இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று பிரதமர் ஷின்úஸா அபே வலியுறுத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com