தாய்ப்பால் ஏற்றுமதிக்கு கம்போடியா தடை

தாய்ப்பாலை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்து கம்போடியா அரசு உத்தரவிட்டது.

தாய்ப்பாலை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்து கம்போடியா அரசு உத்தரவிட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் கம்போடியாவிலிருந்து தாய்ப்பாலை இறக்குமதி செய்து அதைப் பதப்படுத்தி விற்பனை செய்து வந்தது. 150 மில்லிலிட்டர் தாய்ப்பால் 20 டாலர் (சுமார் ரூ. 1,300) என்னும் விலைக்கு அமெரிக்காவில் விற்பனை செய்து வந்தது அந்த நிறுவனம்.
இதன் மூலம், தாய்ப்பால் சுரக்காத அமெரிக்கத் தாய்மார்களின் பச்சிளம் குழந்தைகளுக்குத் தேவைப்படும் ஊட்ட உணவு கிடைக்கும்படிச் செய்வதாகவும் தாய்ப்பால் அளிக்கும் பெண்களுக்கு அது வருமானத்தை தருகிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.
தாய்ப்பால் வணிகத்துக்கு கம்போடியாவில் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தாய்ப்பால் ஏற்றுமதிக்கு முற்றிலும் தடை விதித்து அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
'கம்போடியத் தாய்மார்களிடம் தாய்ப்பாலை சேகரிப்பது, அதனை ஏற்றுமதி செய்வதற்கு உடனடியாகத் தடை விதிக்கப்படுகிறது. கம்போடியா ஏழை நாடானாலும், பல இன்னல்களை சந்தித்து வந்தாலும் தாய்ப்பாலை விற்க வேண்டிய நிலையில் இல்லை' என்று அந்நாட்டு அரசு வெளியிட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் குழந்தைகள் நலன் அமைப்பான யுனிசெஃப், கம்போடியாவில் தாய்ப்பால் வணிகத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது. கம்போடியாவில் ஏராளமான பச்சிளம் குழந்தைகளுக்குப் போதிய ஊட்டச் சத்து இல்லாத நிலையில், அந்நாட்டுத் தாய்மார்களின் தாய்ப்பால் நாட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்று யுனிசெஃப் அந்த கண்டன அறிக்கையில் தெரிவித்திருந்தது.
தாய்ப்பால் ஏற்றுமதிக்குத் தடை விதித்திருப்பதற்கு பெண்ணுரிமை, குழந்தை நலன் சார்ந்த சில அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ள அதே வேளையில், அதன் மூலம் வருவாய் ஈட்டி வந்த பல தாய்மார்கள் அரசின் தடை உத்தரவு ஏமாற்றம் அளிப்பதாகக் கூறியுள்ளனர்.
'எங்கள் குழந்தைகளுக்கு அளித்தது போக கூடுதலாகச் சுரந்த பாலை நிறுவனத்துக்கு அளித்து வந்தோம். அதன் மூலம் நாளொன்றுக்கு 10 டாலர் வரை (சுமார் ரூ. 650) வருமானம் கிடைத்து வந்தது. இப்போது தடை விதித்ததால், எங்களுக்கு கிடைத்து வந்த கூடுதல் வருவாயை இழந்துவிட்டோம்' என்று சிலர் தெரிவித்திருக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com