தலைமை நீதிபதி பதவி நீக்க விவகாரம் எதிரொலி: "உஷார் நிலையில்' நேபாள ராணுவம்

நேபாள உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி பதவி நீக்க விவகாரத்தால் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலைத் தொடர்ந்து, அந்நாட்டு ராணுவம் உஷார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி பதவி நீக்க விவகாரம் எதிரொலி: "உஷார் நிலையில்' நேபாள ராணுவம்

நேபாள உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி பதவி நீக்க விவகாரத்தால் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலைத் தொடர்ந்து, அந்நாட்டு ராணுவம் உஷார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நேபாள உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கியைப் பதவி நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 30) தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் ஆளும் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் புதிய திருப்பமாக, ராணுவம் உஷார் நிலையில் இருப்பதாக அறிவித்துள்ளது. நேபாள ராணுவத்தின் ஊடகப் பிரிவு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலையை ராணுவம் ஆய்வு செய்தது. இதையடுத்து, தற்போது நடைபெறும் பல்வேறு சம்பவங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அளிக்கும் சவால்களை எதிர்கொள்ள ராணுவம் உஷார் நிலையில் இருக்கத் தீர்மானித்துள்ளது என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் என்ன சம்பவங்கள், என்ன சவால்கள், உஷார் நிலை நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து எந்த விளக்கத்தையும் ராணுவம் அளிக்கவில்லை.
அந்நாட்டில் வரும் 14-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்திய வம்சாவளியினரான மதேசிகள் மாகாண எல்லை சீரமைப்பு, அரசியல் சாசனத் திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென்றால் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலின்போது, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ராணுவம் ஈடுபடுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பரபரப்பான அரசியல் சூழலில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவி நீக்க விவகாரம் பல்வேறு அரசியல் திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
தனக்குத் தெரியாமல் தலைமை நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டதாக, நேபாளத்தின் 3 துணைப் பிரதமர்களில் ஒருவரான விமலேந்திர நிதி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். ஆளும் கூட்டணியின் மிகப் பெரிய கட்சியாக உள்ள நேபாளி காங்கிரûஸச் சேர்ந்த அவர் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார். அந்தப் பதவியையும் அவர் ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
மற்றொரு துணைப் பிரதமரான கமல் தாப்பா பதவி நீக்க விவகாரம் தனக்கு வேதனை அளிப்பதாகத் தெரிவித்திருந்தார். அவர் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ராஷ்ட்ரீய பிரஜாதந்திர கட்சியின் தலைவராகவும் உள்ளார். இந்தத் தீர்மானம் தேவையற்றது என்றும் கண்டனத்துக்கு உரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது புதிய திருப்பமாக, உஷார் நிலையில் இருப்பதாக ராணுவம் அறிவித்துள்ளது.
பின்னணி: அண்மையில் நேபாள காவல் துறைத் தலைவரின் பதவி உயர்வு விவகாரம் அந்நாட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அது தொடர்பான உச்ச நீதிமன்ற விசாரணையில் அப்பதவிக்கான தகுதிகள் குறித்த விவாதம் அதிகாரிகள் வட்டத்தில் அதிருப்தியை எழுப்பியது. இதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில், தலைமை நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானத்தை ஆளும் கூட்டணியைச் சேர்ந்த நேபாளி காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த இரு எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தனர். அவ்விரு கட்சிகளைச் சேர்ந்த 249 எம்.பி.க்கள் அந்தத் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
நாடாளுமன்றம் மற்றும் அதிகாரிகள் வரம்பில் தலைமை நீதிபதி தலையிடுவதாகவும் தனது தீர்ப்புகளில் அவர் பாரபட்சம் காட்டுவதாகவும் அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்நாட்டு அரசியல் சாசனத்தின் கீழ், தலைமை நீதிபதியின் பதவி நீக்கம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டாலே அவர் இடை நீக்கம் செய்யப்பட்டவர் ஆவார். இதையடுத்து, நேபாள உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தலைமை நீதிபதியாக கோபால் பராஜுலி நியமிக்கப்பட்டுள்ளார்.
நேபாளத்தில் 1952-இல் பிறந்த சுசீலா கார்க்கி, பட்டப் படிப்புக்குப் பிறகு, உயர் கல்வி மற்றும் சட்டக் கல்வியை இந்தியாவில் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் கற்றார்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் நேபாள உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
பின்னர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு பதவி உயர்வு பெற்றார். அவர் அந்நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தின் முதல் பெண் அதிபர் வித்யாதேவி பண்டாரி, நாடாளுமன்றத்தின் முதல் பெண் அவைத் தலைவர் ஓம்சாரி கார்த்தி மகர், உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக சுசீலா கார்க்கி என அந்நாட்டின் மூன்று முக்கியப் பதவிகளைப் பெண்கள் வகித்து வந்தனர். இந்த நிலையில் சுசீலா கார்க்கியின் பதவி நீக்கத் தீர்மானம் தாக்கலாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com