சிரியா ராணுவத்துக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

சிரியா ராணுவ வாகனங்களுக்கு எதிராக அமெரிக்கப் போர் விமானங்கள் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தின.

சிரியா ராணுவ வாகனங்களுக்கு எதிராக அமெரிக்கப் போர் விமானங்கள் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தின.
சிரியாவின் கிழக்குப் பகுதியில் ஜோர்டானையொட்டிய எல்லைப் பகுதியில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனங்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் தாக்குதல் நிகழ்த்தின. உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மாலை வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
அந்தப் பகுதியில் அமெரிக்க ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் நிலை இருந்ததாகவும், அமெரிக்காவுக்கும் அதன் கூட்டுப் படைக்கும் பாதகம் ஏற்படும் வகையில் சிரியா ராணுவத்தினர் செயல்பட்டதால் தாக்குதல் நிகழ்த்தியதாகவும் அமெரிக்கக் கூட்டுப் படை தெரிவித்தது.
இந்தத் தாக்குதலில் பலி எண்ணிக்கை குறித்து சிரியா ராணுவம் எந்த விவரமும் வெளியிடவில்லை.
அமெரிக்கக் கூட்டுப் படையின் தாக்குதலுக்கு சிரியா கடுமையான கண்டனம் தெரிவித்தது. அந்த நாட்டின் இறையாண்மை மிக்க பிரதேசத்தில் பயங்கரவாதத் தடுப்புக்கான ரோந்து நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டபோது, அமெரிக்கா அத்துமீறித் தாக்குதல் நிகழ்த்தியுள்ளது என்று சிரியா ராணுவத்தின் கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தாக்குதல்களால் சிரியாவை அச்சுறுத்த முடியாது என்று மேலும் குறிப்பிட்டது.
அமெரிக்கா நிகழ்த்திய வான்வழித் தாக்குதல், சிரியாவின் இறையாண்மைக்கு எதிரானது என்று ரஷியா கடும் கண்டனம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com