ஜப்பான் பேரரசர் அரியணை துறப்பு: விரைவில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல்

ஜப்பான் பேரரசர் அகிஹிடோ அரியணை துறப்பது தொடர்பான தீர்மானத்துக்கு அரசு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்ததையடுத்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விரைவில் அது தாக்கல்
ஜப்பான் பேரரசர் அரியணை துறப்பு: விரைவில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல்

ஜப்பான் பேரரசர் அகிஹிடோ அரியணை துறப்பது தொடர்பான தீர்மானத்துக்கு அரசு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்ததையடுத்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விரைவில் அது தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து அமைச்சரவைச் செயலர் யோஷிஹிடே சுகா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
ஜப்பான் பேரரசர் அரியணை துறப்பு விவகாரத்தை வெள்ளிக்கிழமை கூடிய அமைச்சரவை விவாதித்தது. அது தொடர்பான தீர்மானத்தைத் தாக்கல் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. விரைவிலேயே அது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய மூன்று ஆண்டுகளுக்குள் பேரரசர் அகிஹிடோ அரியணையைத் துறக்கலாம் என்று அமைச்சரவைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் எந்தத் தாமதமும் இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேரரசரின் விருப்பப்படியே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
ஜப்பான் ஆட்சி அமைப்பில் பேரரசருக்கு நேரடி அதிகாரங்கள் இல்லை என்றபோதிலும், அவர் அந்நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்து வருகிறார். மக்களிடையே பேரரசர் அகிஹிடோவுக்கு (83) மிகுந்த செல்வாக்கும் மதிப்பும் உள்ளது.
அந்த நாட்டு அரசியல், சமூக வாழ்க்கையில் அவருக்குப் பெரும் பங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், உடல் நலக் குறைவு காரணமாகத் தனது கடமைகளைச் செய்வதில் சிரமம் ஏற்பட்டிருப்பது தனக்கு வேதனை அளிப்பதாக இருக்கிறது என்று அவர் கூறினார்.
ஜப்பான் அரச வம்சம் கடந்த 2,600 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக இருந்து வருகிறது என்று கூறப்படுகிறது. தற்போதைய அரச குடும்பமானது கி.மு. 660-ஆம் ஆண்டு முதல் இடையறாத அரச வம்சமாகத் திகழ்கிறது.
பேரரசர் தனது பதவியைத் துறப்பது தொடர்பான சட்ட விதிமுறைகள் எதுவும் தற்போது இல்லை. அவருக்குப் பிறகு, பட்டத்து இளவரசராக உள்ள மூத்த மகன் நருஹிடோ பேரரசராக அறிவிக்கப்படுவார் என்று பொதுவாக கருதப்படுகிறது.
2018-ஆம் ஆண்டு டிசம்பரில் பேரரசர் பதவி துறப்பார் எனவும், 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி பட்டத்து இளவரசருக்கு புதிய பேரரசராக அரியணையேறுவார் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com