ஈரான் அதிபர் தேர்தலில் ரெளஹானிக்கு அமோக வெற்றி

ஈரான் அதிபர் தேர்தலில் ஹசன் ரெளஹானிக்கு அமோக வெற்றி கிடைத்ததையடுத்து அவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிபர் பதவி வகிக்க உள்ளார்.
ஈரான் அதிபர் தேர்தலில் ரெளஹானிக்கு அமோக வெற்றி

ஈரான் அதிபர் தேர்தலில் ஹசன் ரெளஹானிக்கு அமோக வெற்றி கிடைத்ததையடுத்து அவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிபர் பதவி வகிக்க உள்ளார்.

அந்நாட்டில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் தற்போதைய அதிபர் ஹசன் ரெளஹானியும் தீவிரக் கொள்கையுடைய இப்ராஹிம் ரெய்ஸியும் போட்டியிட்டனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் 73 சதவீத வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குப் பதிவு நேரம் முடிந்த பின்னரும் ஏராளமானோர் வரிசையில் காத்திருந்ததைத் தொடர்ந்து, பல இடங்களில் வாக்குப் பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டது.
தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின. ஹசன் ரெளஹானி 2.35 கோடி வாக்குகள் பெற்றதாகவும், இப்ராஹிம் ரெய்ஸி 1.58 கோடி வாக்குகள் பெற்றதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மொத்த வாக்குகளில் 57% ரெளஹானிக்கும், 38.3% இப்ராஹிம் ரெய்ஸிக்கும் கிடைத்தன.
தனது வெற்றி குறித்து ஹசன் ரெளஹானி கருத்து தெரிவிக்கையில், மிதவாத அரசியல் மீது நாட்டு மக்கள் மீண்டும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் என்றார்.
பெரும் வாக்கு வித்தியாசத்தில் ரெளஹானி மீண்டும் இரண்டாவது முறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், மிதவாத அரசியலுக்கு அந்நாட்டு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
மேற்கத்திய நாடுகளுடன் மோதல் போக்கைக் கைவிடுத்து, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி ஈரானுக்கு சாதகமான முடிவுகள் கிடைப்பதையே ஈரானியர்கள் விரும்புகின்றனர் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று மேற்கத்திய ஊடகங்கள் கருத்து தெரிவித்தன.
முன்னாள் அதிபர் அகமதிநிஜாதின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அணு ஆயுத ஆராய்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தன. பிற நாடுகளுடன் கச்சா எண்ணெய் விற்பனை உள்ளிட்ட எந்தப் பரிவர்த்தனையையும் மேற்கொள்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டது. அதற்கும் முன்பே சர்வதேச வர்த்தகம் மூலம் பெறப்பட்டு வெளிநாட்டு வங்கிகளில் இருந்த ஈரானின் பணமும் முடக்கப்பட்டது. இதனால் ஈரானின் பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியது.
இந்த நிலையில், கடந்த 2013-ஆம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மிதவாதியான ஹசன் ரெளஹானி வெற்றி பெற்று முதல் முறையாக அதிபரானார். வல்லரசு நாடுகளுடன் நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைகளின் முடிவில் ஈரான் மீதான பல பொருளாதாரத் தடைகள் 2015-இல் நீக்கப்பட்டன. ஆக்கபூர்வமான அணு ஆராய்ச்சித் திட்டங்களை ரஷியாவின் மேற்பார்வையில் மேற்கொள்ள சர்வதேச உடன்படிக்கை ஏற்பட்டது. ஆயினும் ஏவுகணை ஆராய்ச்சி உள்ளிட்டவற்றுக்கு தடைகள் நீடிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com