குல்பூஷணுக்கு தூதரக உதவி வழங்க சர்வதேச நீதிமன்றம் உத்தரவிடவில்லை: பாகிஸ்தான்

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு, இந்தியத் தூதரகம் உதவ அனுமதிக்கும்படி

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு, இந்தியத் தூதரகம் உதவ அனுமதிக்கும்படி சர்வதேச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

முன்னதாக பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்து, உளவு பார்க்கும் வேலைகளில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில், குல்பூஷணுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அண்மையில் மரண தண்டனை விதித்தது. அவர் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அவரது மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியதை பாகிஸ்தான் ஏற்கவில்லை.
இதையடுத்து, நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா அணுகியது. இந்த விவகாரம் தொடர்பாக, சர்வதேச நீதிமன்றத்தில் கடந்த 18-ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது, இரு தரப்பும் முன்வைத்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைத்தனர்.
இதனிடையே, மரண தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்வதற்கு, குல்பூஷணுக்கு இந்தியத் தூதரகத்தின் உதவி தேவை என்பதால், அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்தியா பலமுறை கோரிக்கை விடுத்தது. ஆனால், அவற்றை பாகிஸ்தான் ஏற்கவில்லை. இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவு விவகார ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ், இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
குல்பூஷணுக்கு இந்தியத் தூதரகம் உதவுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இதுபோன்ற வழக்குகளில், மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான்.
சர்வதேச நீதிமன்றத்தில் அடுத்த விசாரணை நடைபெறும்போது, வலுவான சட்டக் குழுவுடனும், முழுமையான முன்னேற்பாடுகளுடனும் செல்வோம் என்றார் அஜீஸ்.
அரசின் தலைமை வழக்குரைஞர் ஆஜராகிறார்: இதனிடையே, சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் தரப்பில் தாம் ஆஜராகவிருப்பதாக அந்நாட்டு அரசின் தலைமை வழக்குரைஞர் அஷ்தர் ஒளசாஃப் அலி சனிக்கிழமை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com