பள்ளிச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த விவகாரம்: குற்றத்தை ஒப்புக் கொண்டார் முன்னாள் அமெரிக்க எம்.பி.

அமெரிக்க முன்னாள் எம்.பி. அந்தோணி வைனர் பள்ளிச் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு அளிக்கும் விதமாக செல்லிடப்பேசியில் ஆபாசப் படங்கள், குறுந்தகவல்கள் அனுப்பியதாக நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.
நியூயார்க் மாவட்ட நீதிமன்ற விசாரணை முடிந்து வெளியே வரும் அந்தோணி வைனர்.
நியூயார்க் மாவட்ட நீதிமன்ற விசாரணை முடிந்து வெளியே வரும் அந்தோணி வைனர்.

அமெரிக்க முன்னாள் எம்.பி. அந்தோணி வைனர் பள்ளிச் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு அளிக்கும் விதமாக செல்லிடப்பேசியில் ஆபாசப் படங்கள், குறுந்தகவல்கள் அனுப்பியதாக நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.
மைனர் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்த குற்றத்துக்கு அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அவருடைய மனைவி ஹுமா அபிதீன், ஹிலாரி கிளிண்டனின் அதிபர் தேர்தல் பிரசாரக் குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்து வந்தார். மேலும், அதிபர் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வந்த கால கட்டத்தில்தான், அந்தோணி வைனர் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளம் வழியாகவும் செல்லிடப்பேசி வழியாகவும் அவர் பெண்களுக்கு ஆபாசப் படங்கள் அனுப்பி வந்ததாக ஏராளமான புகார்கள் உண்டு. 15 வயதுப் பள்ளி மாணவிக்கு ஆபாசப் படங்கள் அனுப்பியதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் செய்தி வெளியானதையடுத்து, எஃப்.பி.ஐ. அந்தோணி வைனர் மீது புகார் பதிவு செய்து விசாரித்தது.
இது சைபர் குற்றத்தின் கீழ் வருவதால், அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. இந்தப் புகாரை விசாரித்து
வந்தது.
அவருடைய செல்லிடப்பேசியைப் பறிமுதல் செய்து பரிசோதித்ததில் அவர் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை அளிக்கும் விதமாக ஆபாச குறுந்தகவல் அனுப்பியது உறுதியாகியது. பல முறை படங்கள், தகவல்கள், விடியோ படங்களை அவர் அனுப்பினார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் கட்ட விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளதாகக் கூறிய நீதிபதி லொரெட்டா பிரெஸ்கா, "இந்தக் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்கிறீர்களா?' என்று கேட்டார்.
குற்றத்தை ஒப்புக் கொள்வதாகத் தெரிவித்த அந்தோணி வைனர், தான் கொண்டு வந்திருந்த ஒப்புதல் அறிக்கையை வாசிக்க நீதிபதியிடம் அனுமதி கேட்டார். பின்னர் அந்த அறிக்கையைக் கண்ணீர் மல்க வாசித்தார். வாசிக்கும்போது பல முறை அவர் கதறி அழுதார்.
சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த குற்றத்தை ஒப்புக் கொண்டு அவர் நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது: "நான் குற்றவாளி என்பதை ஒப்புக் கொள்கிறேன். சட்டத்துக்கும், நன்னெறிகளுக்கும் விரோதமாக நடந்து கொண்டேன்.
என்னை ஒரு நோய் பீடித்துள்ளது. எனது மோசமான நடத்தைக்கு அதை மட்டுமே காரணமாகக் கூற மாட்டேன். எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் புண்படுத்தி, அவர்கள் மீது பேரிடி விழச் செய்துவிட்டேன். அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
மன நல சிகிச்சை பெற உத்தரவு: குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, அவர் உடனடியாக எஃப்.பி.ஐ.யிடம் சரணடைய வேண்டும் என்று நீதிபதி லொரெட்டா பிரெஸ்கா உத்தரவிட்டார். அந்தோணி வைனர் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும்; செல்லிடப்பேசியை எஃப்.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்; பாலியல் குற்றவாளி என்று அவரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்; நியூயார்க் நகரைத் தவிர வேறு எங்கும் பயணம் மேற்கொள்ளக் கூடாது; வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியிடும் வரை அவர் தொடர்ந்து மன நல சிகிச்சை பெற வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
தண்டனை அறிவிப்பு செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி வெளியாகவுள்ளது. தண்டனை அறிவிப்பு வெளியாகும் வரை சிறை செல்லாமல் இருக்க 1.5 லட்சம் டாலர் (சுமார் ரூ. 1 கோடி) ஜாமீன் தொகை செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
பல முறை : இதற்கு முன்பும் பல முறை அவர் பாலியல் ரீதியிலான குறுந்தகவல்கள், படங்கள், விடியோ காட்சிகளை பல பெண்களுக்கு அவர் அனுப்பியுள்ளார். திருமணமாவதற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் கூட அவர் அது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். சமூக வலைதளத்தில் அவரைப் பின்தொடர்ந்த 21 வயது மாணவிக்கு ஒரு முறை அவர் ஆபாசப் படம் அனுப்பினார்.
2011-ஆம் ஆண்டில் செல்லிடப்பேசி, சமூக வலைதளம் மூலம் ஆபாசப் படங்கள் உள்ளிட்டவற்றைப் பல பெண்களுக்கு அனுப்பி பாலியல் தொல்லை அளித்த விவகாரம் வெளியானதில் அவர் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.
இதற்கெல்லாம் பிறகும், கடந்த 2013-ஆம் ஆண்டில் நியூயார்க் நகர மேயர் பதவிக்கு அந்தோணி வைனரை வேட்பாளராக அறிவிக்க ஜனநாயகக் கட்சி திட்டமிட்டிருந்தது. குடியரசுக் கட்சியின் கடுமையான எதிர்ப்புக்குப் பிறகுதான் மேயர் தேர்தல் வாய்ப்பு நழுவியது.


வைனர் ஏற்படுத்திய அரசியல் பூகம்பம்

பள்ளி மாணவிக்கு ஆபாசப் படம் அனுப்பிய விவகாரத்தில், அந்தோணி வைனரின் மடிக்கணினியைப் பரிசோதித்ததில் ஹிலாரி கிளிண்டனின் பல அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்கள் இருந்தது தெரிய வந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், அரசுத் தகவல்களின் பரிமாற்றத்துக்குத் தனியார் கணினி சேமிப்பகத்தைப் பயன்படுத்தி வந்தார் என்ற விவகாரம் வெளியானது. அதிபர் தேர்தல் பிரசாரம் காரசாரமாக நடைபெற்று வந்த வேளையில் இந்த விவகாரம் வெளியானதும், பெரும் அரசியல் பூகம்பம் வெடித்தது. ஹிலாரியின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானது. இதனை குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். இறுதியில் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று அதிபரானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com