இலங்கையில் பலத்த மழை: 90 பேர் பலி

இலங்கையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 90 பேர் உயிரிழந்தனர்; மேலும், 110 பேரைக் காணவில்லை.

இலங்கையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 90 பேர் உயிரிழந்தனர்; மேலும், 110 பேரைக் காணவில்லை.
இதுகுறித்து பேரிடர் மேலாண்மை மைய அதிகாரிகள் தெரிவித்ததாவது:
இலங்கையில் பருவமழை காலம் தொடங்கியுள்ளது. அதன் அறிகுறியாக, சென்ற வியாழக்கிழமை முதல் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து பலத்த சேதம் உண்டானது. ஆயிரக்கணக்கான ஏக்கரிலான பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பல ஆறுகளில் நீரோட்டத்தின் அளவு வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கேலானி மற்றும் களுகங்கை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அதிகபட்சமாக சபரகமுவா மாவட்டத்தில் 2,811 குடும்பங்களைச் சேர்ந்த 7,856 பேரும், கேலானி மாவட்டத்தில் 7,157 பேரும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 90 பேர் உயிரிழந்தனர். மேலும், 110 பேரைக் காணவில்லை. ரத்னபுரா மாவட்டத்தில் 10 பேரும், கலுதாராவில் 9 பேரும் பலியாகினர்.
10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடு, உடமைகளை இழந்து தவிக்கின்றனர். வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணிகளில் விமானப்படை, கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மலையகப் பகுதிகளான கேலி, கிகேளி, ரத்னபுரா, கலுதாரா, மாத்தரை மற்றும் அம்பான் தோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சிக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. இதனால், அங்கு வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் கடந்த ஆண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com