பாகிஸ்தானுக்கு அளிக்கும் ராணுவ உதவித் தொகையைக் குறைக்க அமெரிக்கா திட்டம்

பாகிஸ்தானுக்கு அளித்து வரும் ராணுவ உதவித் தொகையைக் குறைக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு அளித்து வரும் ராணுவ உதவித் தொகையைக் குறைக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தத் தகவலை அமெரிக்க பாதுகாப்புத் துறையின் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மத்திய ஆசிய பிரிவு விவகார செய்தித் தொடர்பாளர் ஆடம் ஸ்டம்ப் வெளியிட்டார். அவர் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது:
அமெரிக்கப் படைகளின் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அளித்து வரும் ஒத்துழைப்பு, உதவிக்கு அமெரிக்க அரசு பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.
பயங்கரவாதத் தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் கூட்டணி நாடுகள் மேற்கொண்ட செலவுகளை அந்நாடுகளுக்கு அமெரிக்கா திருப்பி அளித்து வருகிறது. "கூட்டுப் படை ஆதரவு நிதி' என்று அறியப்படும் இந்த நிதிக்கு மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
2016-ஆம் ஆண்டுக்கு 90 கோடி டாலர் (சுமார் ரூ. 5,850 கோடி) ஒதுக்கீடு செய்ய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. அதில், முந்தைய 2015-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அமெரிக்க கூட்டுப் படையினருக்கு பாகிஸ்தான் அளித்து வந்த பல்வேறு ஆதரவு நடவடிக்கைகளுக்கான செலவை ஈடுகட்டும் வகையில், முதல் கட்டமாக 55 கோடி டாலர் வழங்க ஏற்கெனவே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மீதியுள்ள 35 கோடி டாலரை பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டுமானால், ஹக்கானி பயங்கரவாத இயக்கத்துக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் உறுதி செய்ய வேண்டும். அவரது உறுதி அளிப்புக்குப் பிறகே இரண்டாம் கட்ட உதவித் தொகை வழங்கப்படும். இந்த விவகாரம் இன்னும் பாதுகாப்புத் துறை அமைச்சரின் பரிசீலனையில் உள்ளது. முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. 2017-ஆம் ஆண்டுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும்.
இந்நிலையில், வரும் 2018-ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டை 80 கோடி டாலராக (சுமார் ரூ. 5,200 கோடி) குறைக்க டிரம்ப் அரசு திட்டமிட்டுள்ளது. இதுவரை அளிக்கப்பட்டு வந்த தொகையைவிட இது 10 கோடி டாலர் (சுமார் ரூ. 650 கோடி) குறைவாகும் என்றார் அவர்.
கடந்த ஒபாமா அரசின் இறுதி கால கட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஆஷ்டன் கார்ட்டர், பாகிஸ்தானுக்கு வழங்கப்படவிருந்த இரண்டாம் கட்ட நிதி உதவியை நிறுத்தியது நினைவுகூரத் தக்கது. ஹக்கானி உள்ளிட்ட பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறி அந்த நாட்டுக்கு அளிக்க ஒதுக்கீடு செய்யப்பட்ட ராணுவ உதவி நிதியை நிறுத்தினார்.
நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு ஏற்படுத்தப்பட்ட கூட்டுப் படை ஆதரவு நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாகிஸ்தான் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் இதுவரை 1,400 கோடி டாலர் (சுமார் ரூ. 91,000 கோடி) நிதி உதவி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
அல்-காய்தா, தலிபான் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் எடுத்து வரும் நடவடிக்கைகள் மெச்சத் தகுந்தவை என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை பல அறிக்கைகளில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com