இலங்கையில் 60 தமிழர்கள் சித்திரவதை: விசாரணை நடத்த அரசு முடிவு

இலங்கையில் 60 தமிழர்கள் சித்திரவதைக்குள்ளானதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், அதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்தது.

இலங்கையில் 60 தமிழர்கள் சித்திரவதைக்குள்ளானதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், அதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் கடந்த ஜூலை வரை 60 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்பின் குழு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அவர்களுக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தலும் அளிக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. அவர்களில் 20 பேரின் உடம்பில் அடித்ததால் ஏற்பட்டுள்ள தழும்புகளுடன் கூடிய புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தல், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றின் வெற்றியைத் தொடர்ந்து, இலங்கையில் தேசிய ஒற்றுமைக்கான அரசு அமைந்துள்ளது.
தமிழர்களுடன் நல்லிணக்கம், நல்ல ஆட்சி நிர்வாகம், மனித உரிமைகள் பாதுகாப்பு ஆகியவற்றை அளிக்க இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. அப்பாவிகள் சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காவல் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு அப்பாவிகளை சித்திரவதை செய்யக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவை மீறினால் சட்டப்படி அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும். அப்பாவிகள் சித்திரவதை செய்யப்படுவதாக கூறப்படும் இடங்களுக்கு மனித உரிமைகள் ஆணையம் சென்று ஆய்வு செய்வதை வரவேற்கிறோம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய அதிபராக மைத்ரிபால சிறீசேனா பதவி வகித்து வருகிறார்.
முன்னதாக, 60 அப்பாவித் தமிழர்கள் சித்திரவதை செய்யப்படுவதாக எழுந்துள்ள புகாரை கவனத்தில் எடுத்துக் கொள்வோம் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியா குட்டரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com