டிசம்பரில் இந்தியாவுடன் எல்லைப் பேச்சுவார்த்தை: சீனா அறிவிப்பு

இந்தியா-சீனா இடையிலான 20-ஆவது சுற்று எல்லைப் பேச்சுவார்த்தை அடுத்த மாதம் தொடங்கும் என்று சீனா அறிவித்துள்ளது.

இந்தியா-சீனா இடையிலான 20-ஆவது சுற்று எல்லைப் பேச்சுவார்த்தை அடுத்த மாதம் தொடங்கும் என்று சீனா அறிவித்துள்ளது.
 இரு நாடுகள் இடையிலான எல்லைப் பேச்சுவார்த்தையை நடத்த இந்தியா சார்பில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவால், சீனா சார்பில் அந்நாட்டு தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜெய்ஷி ஆகியோர் சிறப்புப் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பும் இதுவரை 19 சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன.
 பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹு சென்யிங் இது தொடர்பாகக் கூறியதாவது:
 சீனாவும், இந்தியாவும் எல்லைப் பேச்சுவார்த்தைக்கு மிகுந்த முக்கியத்துவமளித்து வருகின்றன. இருநாடுகள் இடையே எல்லை தொடர்பாக நீடித்து வரும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வுகாண முழு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தும் திருப்திகரமாக அமைந்தன.
 இந்த ஆண்டு அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான தேதியை இருநாடுகளும் விரைவில் முடிவு செய்யும். அனேகமாக அடுத்த மாதத்தில் இப்பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளது.
 ரஷிய, இந்திய, சீன வெளியுறவு அமைச்சர்கள் நிலையிலான பேச்சு வார்த்தையும் விரைவில் நடைபெறவுள்ளது.
 இந்தக் கூட்டத்தை இந்தியாவில் நடத்த சீனா ஆதரவு அளித்துள்ளது. பிலிப்பின்ஸில் கிழக்கு ஆசிய நாடுகள் மாநாட்டில் பங்கேற்கும் இந்தியப் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் சந்தித்துப் பேசுவார்களா? என்பது குறித்து வெளியுறவு அமைச்சகத்துக்கு இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. எனினும், அவர்கள் சந்தித்துப் பேச வேண்டும் என்றுதான் பல்வேறு தரப்பினரும் விரும்புகின்றனர் என்றார் அவர்.
 இந்தியா-சீனா இடையே அண்மையில் டோக்கா லாம் எல்லையை மையமாக வைத்து பிரச்னை ஏற்பட்டது. இரு நாடுகளும் எல்லையில் ராணுவத்தைக் குவித்ததால் போர்ப் பதற்றம் ஏற்பட்டது. 73 நாள்களாக நீடித்து வந்த பதற்றம், இரு தரப்பும் படைகளை வாபஸ் பெற்றதன் மூலம் முடிவுக்கு வந்தது. இந்தப் பிரச்னைக்குப் பிறகு இரு நாடுகள் இடையே அடுத்த சுற்று எல்லைப் பேச்சு நடைபெறுவது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com