இரட்டைக் குடியுரிமை விவகாரம்: மேலும் ஒரு ஆஸ்திரேலிய எம்.பி. ராஜிநாமா

இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் சிக்கி ஆஸ்திரேலியாவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தார்.
இரட்டைக் குடியுரிமை விவகாரம்: மேலும் ஒரு ஆஸ்திரேலிய எம்.பி. ராஜிநாமா

இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் சிக்கி ஆஸ்திரேலியாவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தார்.
 ஜான் அலெக்ஸாண்டர் என்னும் அந்த எம்.பி.யின் தந்தை பிரிட்டனில் பிறந்து, கடந்த 1911-ஆம் ஆண்டு தமது 11-ஆவது வயதில் ஆஸ்திரேலியாவில் குடியேறினார். அந்த வகையில் அவரது மகனான ஜான் அலெக்ஸாண்டருக்கு இயற்கையாகவே பிரிட்டன் குடியுரிமை உண்டு. இந்நிலையில், ஜான் அலெக்ஸாண்டர், லிபரல் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் ஆஸ்திரேலியாவில் கடந்த 1901-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டப்படி, இரட்டைக் குடியுரிமை உள்ள நபர்கள் அந்நாட்டுத் தேர்தல்களில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளாக முடியாது என்பதால் ஜான் அலெக்ஸாண்டர் எம்.பி. பதவியில் தொடர்வது கேள்விக்குறியாகியது.
 இந்நிலையில் அவர் தனது பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தார். தனது இரட்டைக் குடியுரிமையை சட்டப்படி கைவிட்டு இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என்று அவர் அறிவித்தார்.
 முன்னதாக, இரட்டைக் குடியுரிமை விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் பார்னபி ஜாய்ûஸ தகுதி நீக்கம் செய்து அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த அக்.27 உத்தரவிட்டது.
 இரட்டைக் குடியுரிமை காரணமாக மேலும் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உச்ச நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது. இதையடுத்து, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தாங்கள் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் அல்ல என்று உறுதிப்படுத்தும்படி பிரதமர் மால்கம் டர்ன்புல் அறிவுறுத்தினார்.
 இது தொடர்பாக ஆளும் லிபரல் கட்சி எம்.பி. ஜான் அலெக்ஸாண்டர், தனது தந்தை பிரிட்டன் குடியுரிமையை முறைப்படி கைவிட்டாரா என்று தெரிவிக்கும்படி அந்நாட்டு அரசிடம் கேட்டிருந்தார். பிரிட்டன் அரசின் பதில் அவருக்கு சாதகமாக இருக்காது என்ற தகவலையடுத்து, அவர் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.
 துணைப் பிரதமர் உள்ளிட்டோரின் தகுதி நீக்கம் மற்றும் ராஜிநாமாவால், பிரதமர் மால்கம் டர்ன்புல் தலைமையிலான ஆட்சி கேள்விக்குறியாகியுள்ளது. இடைத் தேர்தல் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை, அவரவர் கட்சியிலிருந்து மாற்று உறுப்பினர்கள் நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம்.
 பிரிட்டனின் காலனியாக இருந்து வந்த ஆஸ்திரேலியாவுக்கு கடந்த 1901-இல் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. எனினும் அது பிரிட்டன் முடியாட்சியின் கீழ் செயல்படும் சுதந்திர நாடு. அரசியின் பிரதிநிதியாக ஆஸ்திரேலியாவில் கவர்னர் ஜெனரல் செயலாற்றி வருகிறார். சுதந்திரம் பெற்றபோது இயற்றிய சட்டப்படி, ஆஸ்திரேலிய குடியுரிமையுடன் பிரிட்டன் அல்லது பிற பிரிட்டன் காலனியின் குடியுரிமையும் உள்ளவர்கள் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது.
 இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களாக ஆவதை தடுக்கும் சட்டம் சாதாரண குடிமக்களுக்குப் பொருந்தாது. அந்த வகையில், ஏராளமானோர் பிரிட்டன் காலனி நாடுகளின் குடியுரிமையுடன் ஆஸ்திரேலிய குடியுரிமையும் பெற்று அந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
 ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் 150 இடங்கள் உள்ளன. அதில் தற்போது ஒரே உறுப்பினரின் பெரும்பான்மையுடன் பிரதமர் மால்கம் டர்ன்புல்லின் கட்சி ஆட்சியில் உள்ளது.
 இடைத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி வேட்பாளர்கள் தோல்வியுறும்பட்சத்தில் அரசு கவிழும் அபாயம் உள்ளது.
 ஆஸ்திரேலியாவில் பல நாடுகளிலிருந்து வந்தவர்கள் புதிதாக குடியுரிமை பெற்றுள்ளனர். எதிர்காலத்தில் அவர்களது வம்சாவளியினரை இரட்டைக் குடியுரிமை உள்ள நபர்களாக கருத இடமுள்ளது. அவர்களுக்கும் 1901-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் பாதகமாக இருக்கும். எனவே, அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. ஆனால் அந்த சட்டத்தை ரத்து செய்வது பெரும் சிக்கலான விவகாரம் என்று சட்ட நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com