ஆசியாவின் நலனுக்காக இணைந்து செயல்பட வேண்டும்: டிரம்பிடம் மோடி வலியுறுத்தல்

ஆசியாவின் எதிர்காலத்துக்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஆசியாவின் நலனுக்காக இணைந்து செயல்பட வேண்டும்: டிரம்பிடம் மோடி வலியுறுத்தல்

ஆசியாவின் எதிர்காலத்துக்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம், பரஸ்பர நல்லுறவில் புதிய உச்சத்தை எட்டலாம் என்றும் அவர் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
 அப்போது இந்தியாவின் செயல்பாடுகளை டிரம்ப் வெகுவாகப் பாராட்டியதாகவும், மோடியை தமது உற்ற தோழன் என பெருமைபடக் கூறியதாகவும் வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
 ஆசியப் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த சீனா முயன்று வரும் வேளையில், இந்திய - அமெரிக்க தலைவர்கள் இடையேயான நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது உலக அரங்கில் தனிக் கவனம் பெற்றுள்ளது.
 ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிலிப்பின்ஸ் சென்றுள்ளார். அதன் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற அந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக அவர்கள் இருவரும் விவாதித்தனர்.
 பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயானஒருங்கிணைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், பயங்கரவாத நடவடிக்கைகளை வேரறுப்பது பற்றி மோடியும், டிரம்பும் கலந்துரையாடியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்த போதிலும், அவற்றில் ஆசியாவின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களே பிரதானமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
 சர்வதேச உச்சி மாநாடுகளில், வெவ்வேறு நாடுகளின் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசுவது சம்பிரதாயமான நிகழ்வுதான் என்றாலும், மோடி - டிரம்பின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
 சீனாவுக்கு எதிராக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அணிதிரளக் கூடும் என்று ஊகங்கள் எழுந்து வரும் சூழலில் இந்தச் சந்திப்பு நடைபெற்றிருப்பதே அதற்குக் காரணம்.
 டிரம்புடனான சந்திப்பு நிறைவடைந்த பிறகு பிரதமர் மோடி அதுதொடர்பாகக் கூறியதாவது:
 இந்தியா - அமெரிக்கா இடையேயான நல்லுறவு மேம்பட்டு வருகிறது. இரு தரப்புக்கும் இடையே நீடிக்கும் இந்த உறவானது பரஸ்பர பலன்களையும், நலனையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருப்பதாகக் கருத முடியவில்லை. மாறாக, அதையும் கடந்து இரு நாடுகளும் பல்வேறு விவகாரங்களில் ஒத்துழைப்பு நல்கி வருகின்றன.
 ஆசியாவின் எதிர்காலத்துக்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படுவது அவசியம். அந்த இலக்கை நோக்கியே தற்போது இருதரப்பும் பயணித்து வருகின்றன. அதைத் தவிர வேறு சில விவகாரங்களிலும் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
 இந்த நேரத்தில், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவிக்க வேண்டிய கடமை எனக்குள்ளது. எந்த இடத்தில் எல்லாம் வாய்ப்புகள் கிடைக்கிறதோ அங்கெல்லாம் இந்தியாவைப் பாராட்டி அவர் கருத்து தெரிவித்து வருகிறார். இந்தியா குறித்து மிக உயரிய எண்ணமும், நம்பிக்கையும் டிரம்புக்கு உள்ளது. உலக நாடுகளும் சரி; அமெரிக்காவும் சரி, இந்தியா மீது கொண்டுள்ள எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நாங்கள் முயற்சிப்போம் என்றார் மோடி.
அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் பிரதமர்
 மணிலாவை அடுத்த லாஸ் பானோஸ் நகரில் அமைந்துள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (ஐஆர்ஆர்ஐ) மோடி சென்று பார்வையிட்டார். அப்போது, அங்குள்ள மரபணு வங்கிக்கு இந்தியாவைச் சேர்ந்த இரண்டு அரிசி வகைகளை அவர் வழங்கினார்.
 இந்நிலையில், விபத்து போன்றவற்றால் கால்களை இழந்தவர்களுக்கு, மணிலாவில் உள்ள ஜெய்ப்பூர் ஃபுட் எனப்படும் செயற்கைக்கால்களை வழங்கும் இந்திய தன்னார்வ அமைப்பான மகாவீர் அறக்கட்டளைக்கும் மோடி சென்றார். அதன்பின் அந்த அமைப்பின் சேவையைப் பாராட்டி டுவிட்டர் வலைதளத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டார்.
"தோழர்' மோடி
 மோடியுடனான சந்திப்பு குறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
 ஆசியான் மாநாட்டுக்கு வந்த இந்தியப் பிரதமர் மோடி, தம்மைச் சந்தித்துப் பேசியது மகிழ்ச்சியளிக்கிறது என அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அவர் நமது நண்பர் என்றும், கண்ணியமான மனிதர் என்றும் சந்திப்பின்போது டிரம்ப் புகழாரம் சூட்டினார்.
 இந்தியாவின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் நற்பெயரை ஈட்டியிருப்பதாகக் கூறிய அதிபர் டிரம்ப், அதற்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்தும் தெரிவித்தார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com