இந்தியா-பிலிப்பின்ஸ் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா-பிலிப்பின்ஸ் இடையே பயங்கரவாத ஒழிப்பில் ஒத்துழைப்பு உள்பட 4 முக்கிய ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையெழுத்தாயின.
இந்தியா-பிலிப்பின்ஸ் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா-பிலிப்பின்ஸ் இடையே பயங்கரவாத ஒழிப்பில் ஒத்துழைப்பு உள்பட 4 முக்கிய ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையெழுத்தாயின.
 பிரதமர் மோடி, பிலிப்பினஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
 பயங்கரவாத ஒழிப்பு, பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு, வர்த்தகம், வேளாண்மை, சிறு, குறு தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது தொடர்பாக இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
 இது தொடர்பாக மோடி சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்டுள்ள பதிவில், "பிலிப்பின்ஸ் அதிபருடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்தது. இந்தியா-பிலிப்பின்ஸ் இடையே கலாசாரத் தொடர்புகள் உள்ளன. இரு நாடுகளிடையே வர்த்தகம், தொழில் மேம்பாடு, பல்வறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து விரிவாகப் பேச்சு நடத்தினோம்' என்று கூறியுள்ளார்.
 பிலிப்பின்ஸ் நாட்டின் உள்கட்டமைப்பு, மருந்துப் பொருள்கள் தயாரிப்புத் துறையில் இந்தியாவின் முதலீட்டை வரவேற்பதாக பிலிப்பின்ஸ் அதிபர் ரோட்ரிகோ தெரிவித்துள்ளார்.
 ஆசியான் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிலிப்பின்ஸ் வந்த பிரதமர் மோடி, அங்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா
 ஆர்டன் உள்ளிட்ட பல்வேறு சர்வதேசத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யுங்கள்
 மணிலா, நவ. 13: இந்தியாவில் மேற்கொள்ளும் முதலீடுகளை அதிகரிக்குமாறு ஆசியான் நாடுகளை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
 பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் ஆசியான் அமைப்பின் உச்சி மாநாட்டுக்கான தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, இந்திய இதிகாசமான ராமாயணம் இசை, பாடல்களுடன் கூடிய நாடகமாக நடத்தப்பட்டது. இதை உலகத் தலைவர்கள் கரகோஷம் எழுப்பி ரசித்தனர்.
 அதன் பின் ஆசியான் அமைப்பின் வர்த்தக மன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:
 இந்தியாவை முற்றிலுமாக மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நல்ல நிர்வாகத்தை உறுதிசெய்வதற்காக நாங்கள் இரவு பகலாகப் பணியாற்றி வருகிறோம். அதில் எளிய, திறன்வாய்ந்த நடைமுறைகளும், வெளிப்படைத்தன்மையும் அடங்கும்.
 இந்தியாவில் அன்னிய நேரடி முதலீட்டைப் பெறும் துறைகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவை தாமாகவே ஒப்புதல் அளிக்கக் கூடிய வகையில் உள்ளன. அங்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு, ரூபாய் நோட்டு வாபஸ், திவால் சட்டம் ஆகிய சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், நிதித்துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஆதார் எண்கள், நிதிப் பரிவர்த்தனைகளுடன் இணைக்கப்பட்டு வருகின்றன.
 உலக வங்கி தயாரித்துள்ள, தொழில் தொடங்க உகந்த சூழல் நிலவும் நாடுகளின் பட்டியலில் இந்தியா குறுகிய காலத்தில் 30 இடங்கள் முன்னேறியுள்ளது. இது எந்தவொரு நாடும் எட்டாத மிகப்பெரிய சாதனையாகும். இந்தியாவின் நீண்ட கால சீர்திருத்த முயற்சிகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளும், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையும் இணைந்து இந்தியப் பொருளாதாரத்தின் பெரும் பகுதியை அமைப்பு சார்ந்ததாக மாற்றியுள்ளன.
 உலக அளவிலான உற்பத்தி மையாக இந்தியாவை மாற்ற எனது அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதற்கான இளைஞர்களை வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவின் கடந்த மூன்றாண்டுகளில் பழமையான 1,200 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.
 ஆசியான் பகுதியுடன் நிலம், கடல் மற்றும் வான் ஆகிய வழிகளில் போக்குவரத்தை மேம்படுத்த இந்தியா விரும்புகிறது. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளுடன் தொடர்புகொள்ள மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் இணைந்து முத்தரப்புச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவுக்கும் ஆசியான் அமைப்புக்கும் இடையே கடல்சார் போக்குவரத்து ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக நாங்கள் முயற்சியெடுத்து வருகிறோம்.
 இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவுகள் அதிகரித்து வருகின்றன.
 வர்த்தகத்தையும் முதலீட்டு ஒத்துழைப்பையும் மேலும் மேம்படுத்த இரு தரப்பும் விரும்புகின்றன. ஆசியான் நாடுகள் இந்தியாவில் மேற்கொள்ளும் முதலீடுகளை இன்னும் கூடுதலாக மேற்கொள்ள வேண்டும் என்றார் மோடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com