ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து

ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து

ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே பாதுகாப்புத் துறை ரீதியான ஒப்பந்தம் திங்கள்கிழமை கையெழுத்தானது.

ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே பாதுகாப்புத் துறை ரீதியான ஒப்பந்தம் திங்கள்கிழமை கையெழுத்தானது.
 ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 23 நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் இதில் கையெழுத்திட்டனர்.
 உறுப்பு நாடுகளின் பாதுகாப்புப் படைகளிடையே ஒருங்கிணைப்பு, மேம்பாடு ஆகியவை தொடர்பான பேச்சுவார்த்தைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இதற்கான விதிமுறைகள், முதல் கட்ட நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.
 இது தொடர்பாக ஸ்பெயின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மரியா டொலோரஸ் கூறியது: இந்த உடன்படிக்கை ஐரோப்பிய யூனியன் அமைப்பின் மிக முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும். பாதுகாப்புப் படை வீரர்கள், தளவாடங்கள், பயிற்சி, பாதுகாப்புக் கட்டுமானங்கள் உள்ளிட்ட துறைகளில் உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பு உறுதி செய்கிறது. அந்த ஏற்பாடு தொடரும். அதற்குத் துணையாக இந்த ஒப்பந்தம் செயல்படும்.
 பாதுகாப்புத் துறைக்காக உறுப்பு நாடுகள் ஒதுக்கும் நிதியில் 20 சதவீத தொகை புதிய தளவாடங்கள் வாங்குவதற்காக செலவிடப்படும் என்றும், தொழில்நுட்ப ஆராய்ச்சி-மேம்பாட்டுக்கு 2 சதவீதம் ஒதுக்கப்படும் என்றும் அந்த உடன்படிக்கை தெரிவிக்கிறது.
 பல்வேறு உறுப்பு நாடுகளிடம் ஆளில்லா தாக்குதல் விமானங்கள், பீரங்கிகள் உள்ளிட்ட சில வகை பாதுகாப்பு தளவாடங்கள், தொழில்நுட்பங்கள் தற்போது இல்லை. ஆனால் இந்த ஒப்பந்தம் மூலம் எதிர்காலத்தில் பாதுகாப்புத் தேவைகளை முன்னிட்டு அதிநவீன தொழில்நுட்பங்களும் தளவாடங்களும் கிடைக்கச் செய்ய முடியும். இதன்படி, ராணுவ மருத்துவமனைகள் போன்ற வசதிகளும் உருவாக வாய்ப்புள்ளது. ஒப்பந்த விதிமுறைகளை அனைத்து உறுப்பு நாடுகளும் பின்பற்றுகின்றனவா என்று ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
 டென்மார்க், அயர்லாந்து, உள்ளிட்ட சில நாடுகள் இதில் இன்னும் கையெழுத்திட முடிவு செய்யவில்லை. ஆனால் அந்த நாடுகள் பின்னர் இதில் இணைந்து கொள்ளலாம். உறுப்பு நாடுகள் அல்லாத நட்பு நாடுகளும் குறிப்பிட்ட தேவைக்கு ஏற்ப ஐரோப்பிய யூனியனின் பாதுகாப்பில் தங்கள் பங்களிப்பைச் செய்ய முடியும் என்றார் அவர். ஐரோப்பிய யூனியனைவிட்டு பிரிட்டன் வெளியேறுவதாக அறிவித்துள்ளது. ஆயினும் பாதுகாப்பு விவகாரங்களில் ஐரோப்பாவுக்கு பிரிட்டனின் பங்களிப்பு தொடரும்.
 ஐரோப்பிய யூனியனுக்கென தனி பாதுகாப்புப் படையை உருவாக்கும் விதத்தில் எந்த உடன்படிக்கை ஏற்படுவதையும் பிரிட்டன் விரும்பியதில்லை. எனவே ஐரோப்பிய ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஆரம்பம் முதலே பிரிட்டன் எதிர்த்து வந்தது.
 ஐரோப்பிய யூனியன் அமைப்பில் உக்ரைன் அங்கமாகச் சேர்க்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. வர்த்தக ஒப்பந்தம் போன்ற ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உக்ரைனின் கிரீமியா பகுதியை ரஷியா கடந்த 2014-இல் இணைத்துக் கொண்டது. மேலும், ரஷிய எல்லையையொட்டிய உக்ரைன் பகுதிகளில் நடைபெற்று வரும் கிளர்ச்சிக்கு ரஷியா உதவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில், தற்போதைய ராணுவ ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com