சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஈரான்-இராக் நாடுகளில் 400 பேர் பலி

ஈரான், இராக் ஆகிய நாடுகளில் நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்
சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஈரான்-இராக் நாடுகளில் 400 பேர் பலி

ஈரான், இராக் ஆகிய நாடுகளில் நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் இன்னமும் சிக்கியிருப்பதாலும், காயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பலரது நிலை கவலையளிக்கும் வகையில் இருப்பதாலும் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
இராக் நாட்டின் ஹலப்ஜா நகரில் இருந்து 31 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பகுதியை மையமாகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. பூமிக்கடியில் 23.2 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3ஆகப் பதிவாகியிருந்தது. இந்நிலநடுக்கத்தின் தாக்கம், இர்பிள் முதல் இராக் தலைநகர் பாக்தாத் வரையிலும் உணரப்பட்டது. இதனால் அப்பகுதிகளில் உள்ள வீடுகளும், கட்டடங்களும் பலமாக குலுங்கின. இதையடுத்து மக்கள் அலறியடித்துக் கொண்டு, வீடுகளை விட்டு வெளியேறி வெட்ட வெளியில் தஞ்சமடைந்தனர்.
இதேபோல், இராக்கின் அண்டை நாடான ஈரான், மத்தியதரைக் கடல் பகுதி ஆகியவற்றிலும் நிலநடுக்கத்தின் தீவிரம் உணரப்பட்டது. குறிப்பாக, ஈரான் நாட்டிலுள்ள ஹெர்மான்ஷா மாகாணத்தின் சர்போல்-ஏ-ஜஹாப் பகுதியில் இந்நிலநடுக்கம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளும், கட்டடங்களும் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளன. மேலும் பல வீடுகள் விரிசலடைந்து பலத்த சேதமடைந்துள்ளன.
இந்த இடிபாடுகளில் சிக்கி, 400 பேர் இறந்துவிட்டதாக ஈரான் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் நிலநடுக்கத்தில் 6,603 பேர் காயமடைந்திருப்பதாக ஈரான் அரசு தொலைக்காட்சியின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், இராக் நாட்டில் நிலநடுக்கத்துக்கு 7 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், 535 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 100 முறை அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால், ஹெர்மான்ஷா மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் பீதியுடன் வீடுகளை விட்டு வெளியேறி, இரவு முழுவதும் வெட்ட வெளியில் தங்கியிருந்தனர். ஈரான் நாட்டின் தொலைக்காட்சிகளும், செய்தி நிறுவனங்களும், நிலநடுக்கத்துக்கு அஞ்சி பொது மக்கள் வீதிகளில் ஓடிய காட்சியையும், இரவு நேரத்தில் வெட்ட வெளியில் தங்கியிருந்த காட்சியையும் புகைப்படங்களாகவும், விடியோக்களாகவும் வெளியிட்டுள்ளன.
சர்போல்-ஏ-ஜஹாப் பகுதியில் குடிநீர், மின்சாரச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தொலைபேசி மற்றும் செல்லிடப்பேசி சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் 14 மாகாணங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐஎல்என்ஏ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஹெர்மான்ஷா, இலாம் மாகாணங்களில் இருக்கும் பள்ளிகளுக்கு நிலநடுக்கம் காரணமாக திங்கள்கிழமை விடுமுறை விடப்பட்டது.
இதனிடையே, ஈரானில் நிலநடுக்கத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு, அந்நாட்டின் சக்திவாய்ந்த தலைவராக கருதப்படும் அயதுல்லா அலிகமேனி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படும் உதவியை செய்துதர வேண்டும் என்று மீட்புக் குழுவினரையும், அரசு அதிகாரிகளையும் கமேனி கேட்டுக் கொண்டுள்ளார்.
இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், இயற்கைப் பேரிடர் தொடர்பான துறைகள், சிவில் பாதுகாப்புப் படை குழுக்களுக்கு மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபடுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இராக்குக்கு துருக்கி உதவி
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இராக் நாட்டுக்கு அதன் அண்டை நாடான துருக்கி, விமானம் மற்றும் 30 லாரிகளில் அவசர உதவிப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளது.
இதுகுறித்து துருக்கி பிரதமர் பினாலி இல்டிரிம் தெரிவிக்கையில், "மருத்துவ மற்றும் உணவுப் பொருள்களை இராக்குக்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளோம்' என்றார். ஈரான் கோரிக்கை விடுத்தால், அந்நாட்டுக்கும் உதவிப் பொருள்களை அனுப்பி வைப்போம் என்றும் துருக்கி அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் இரங்கல்
ஈரான், இராக் நாடுகளில் நிலநடுக்கத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்திருப்பதற்கு பாகிஸ்தான் அரசு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
ஈரானில் கடைசியாக கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய நிலநடுக்கம் நேரிட்டது. அதில் 300 பேர் பலியாகினர். அதற்கு முன்பு, கடந்த 2003ஆம் ஆண்டில் நேரிட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தில் 26,000 பேர் பலியாகினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com