'அனைத்து ரோஹிங்கயாக்களையும் மியான்மர் திரும்ப ஏற்க வேண்டும்': ஐ.நா. பொதுச் செயலர் வலியுறுத்தல்

மியான்மரைவிட்டு வெளியேறிய அனைத்து ரோஹிங்கயாக்களையும் அந்த நாடு திரும்ப ஏற்க வேண்டும் என்று அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.
மியான்மரிலிருந்து நாஃப் நதியை கடந்து வங்கதேசத்துக்குள் வரும் ரோஹிங்கயாக்கள் (கோப்புப் படம்).
மியான்மரிலிருந்து நாஃப் நதியை கடந்து வங்கதேசத்துக்குள் வரும் ரோஹிங்கயாக்கள் (கோப்புப் படம்).

மியான்மரைவிட்டு வெளியேறிய அனைத்து ரோஹிங்கயாக்களையும் அந்த நாடு திரும்ப ஏற்க வேண்டும் என்று அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.
அவர் பிலிப்பின்ஸ் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள மியான்மரின் தேசிய ஆலோசகர் ஆங்சான் சூகியை மணிலாவில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து ஐ.நா. பொதுச் செயலர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பது:
மியான்மர் தேசிய ஆலோசகர் ஆங்சான் சூகி - அன்டோனியோ குட்டெரெஸ் சந்திப்பின்போது, ரோஹிங்கயா விவகாரம் குறித்துப் பேசினர். மியான்மரில் அப்பிரிவினர் வசித்து வந்த ராக்கைன் மாகாணத்தில் இயல்பு நிலை திரும்ப அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு ரோஹிங்கயாக்கள் மீண்டும் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த மியான்மர் அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மியான்மரை விட்டு வெளியேறிய ரோஹிங்கயாக்கள் தங்களின் பழைய வசிப்பிடங்களுக்கே திரும்பும் சூழல் உருவாக வேண்டும். அனைத்து ரோஹிங்கயாக்களையும் மியான்மர் அரசு ஏற்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் அந்த சந்திப்பின்போது கூறினார் என்று அவர் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியான் உச்சி மாநாட்டின் இடையே, ஐ.நா. -ஆசியான் அமர்வு நடைபெற்றது. அதில் சிறப்புரையாற்றும்போதும், ரோஹிங்கயா விவகாரத்தை ஐ.நா. பொதுச் செயலர் குறிப்பிட்டார் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் முஸ்லிம்களான ரோஹிங்கயாக்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டதையடுத்து, தீவிரவாதம் எழுந்தது. 
கடந்த ஆகஸ்ட் மாதம் ராக்கைன் மாகாணத்திலிருந்த ராணுவ முகாமை தீவிரவாதிகள் தாக்கினர். பன்னிரண்டு வீரர்களும் ஏராளமான தீவிரவாதிகளும் அந்த மோதலில் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து மாகாணம் முழுவதும் தீவிரவாதிகளுக்கான தேடுதல் வேட்டையை ராணுவம் நடத்தியது. 
அதில் வன்முறை, வீடுகளுக்குத் தீவைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றன. தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மியான்மர் ராணுவத்தினருக்கு அஞ்சி 6 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கயாக்கள் நாட்டைவிட்டு வெளியேறி அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தனர். எல்லையோரம் தாற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ஏராளமான முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிரம்பி வழியும் முகாம்களில் அகதிகள் அனைவருக்கும் போதிய வசதி அளிக்க வங்கதேச அரசு திணறி வருகிறது.
அவர்களை மியான்மர் திரும்ப ஏற்பது தொடர்பாக வங்கதேச அரசுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
'கோஃபி அன்னான் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை'
ஆசியான் உச்சி மாநாட்டின்போது ரோஹிங்கயா விவகாரம் விவாதிக்கப்பட்டதாகவும் ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான் அளித்த அறிக்கை அடிப்படையில் மியான்மர் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அதன் தேசிய ஆலோசகர் ஆங்சான் சூகி தெரிவித்ததாகவும் பிலிப்பின்ஸ் அதிபர் அலுவலகம் கூறியுள்ளது.
பிலிப்பின்ஸ் அதிபரின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பது: ஆசியான் மாநாட்டின் பொதுக்குழு கூட்டத்தில் ரோஹிங்கயா விவகாரம் விவாதிக்கப்பட்டது. இரு கட்டமாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மியான்மர் அப்போது தெரிவித்தது. ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான் ரோஹிங்கயா விவகாரம் தொடர்பாக அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள மியான்மர் தயாராக இருப்பதாக ஆங்சான் சூகி தெரிவித்தார்.
நாட்டைவிட்டு வெளியேறிய ரோஹிங்கயாக்கள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களைத் திரும்ப ஏற்பது தொடர்பாக வங்கதேச அரசுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும். அதையடுத்து, ரோஹிங்கயாக்கள் நாடு திரும்பலாம் என்று ஆங்சான் சூகி கூறினார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோஃபி அன்னான் அறிக்கையில் அகதிகள் சரிபார்ப்பு, மீள் குடியிருப்பு தொடர்பாக விரிவான அறிவுறுத்தல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com