சர்வதேச நீதிமன்ற நீதிபதி தேர்தல்: இந்தியாவுக்கு எதிராக காய் நகர்த்தும் பிரிட்டன்

சர்வதேச நீதிமன்ற நீதிபதி தேர்தலில் இந்திய வேட்பாளருக்கு எதிராக தங்கள் நாட்டு வேட்பாளரை வெற்றிபெற வைப்பதற்காக பிரிட்டன் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அரசியலில் ஈடுபட்டுள்ளது.

சர்வதேச நீதிமன்ற நீதிபதி தேர்தலில் இந்திய வேட்பாளருக்கு எதிராக தங்கள் நாட்டு வேட்பாளரை வெற்றிபெற வைப்பதற்காக பிரிட்டன் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அரசியலில் ஈடுபட்டுள்ளது.
 சர்வதேச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இந்தியாவின் தல்வீர் பண்டாரிக்கும், பிரிட்டனின் கிறிஸ்டோபர் கிரீன்வுட்டுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தல்வீர் பண்டாரி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் செயல்பட்டு வரும் சர்வதேச நீதிமன்றத்தில் மொத்தம் 15 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். இதில் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 5 நீதிபதிகள் சுழற்சி முறையில் புதிதாகத் தேர்வு செய்யப்படுவார்கள். ஐ.நா. பொதுச் சபையில் உள்ள 193 உறுப்பு நாடுகளும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளும் வாக்களித்து இந்த நீதிபதிகளைத் தேர்வு செய்வார்கள். ஐ.நா. பொதுச் சபையில் 97 உறுப்பு நாடுகளின் வாக்குகளையும், பாதுகாப்பு கவுன்சிலில் 8 உறுப்பு நாடுகளின் வாக்குகளையும் ஒரே நேரத்தில் பெறுபவர்கள்தான் சர்வதேச நீதிமன்றத்துக்கு நீதிபதியாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.
 இதுவரை 11 சுற்று வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், ஐ.நா. பொதுச் சபையில் பண்டாரிக்கு தொடர்ந்து பெரும்பான்மை கிடைத்து வருகிறது. அதே நேரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கிறிஸ்டோபருக்கு அதிக ஆதரவு உள்ளது.
 பொதுவாக இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும்போது பொதுச் சபையில் அதிக வாக்குகள் பெரும் வேட்பாளர்தான் சர்வதேச நீதிமன்றத்துக்கு தேர்வு செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்தமுறை ஐ.நா.வின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தை நடத்தி நீதிபதியைத் தேர்வு செய்ய பிரிட்டன் காய் நகர்த்தி வருகிறது. அதாவது இரு அவைகளில் இருந்தும் தலா 3 உறுப்பு நாடுகள் சேர்ந்து புதிய நீதிபதியைத் தேர்வு செய்யும். இது பெரும்பாலும் பிரிட்டனுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
 பாதுகாப்பு கவுன்சிலில் பிரிட்டன் நிரந்தர உறுப்பு நாடாக இருப்பதால் இது தொடர்பாக பிற நாடுகளை அணுகி வருகிறது. இந்திய வேட்பாளரைத் தோற்கடித்து தங்கள் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று ஐ.நா.வில் இதுபோன்ற அரசியலை பிரிட்டன் நடத்துகிறது. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ள சில நாடுகளுக்கு இதில் விருப்பமில்லை.
 96 ஆண்டுகளுக்கு முன்பு இரு அவைகளிலும் ஒரே வேட்பாளர் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில் ஐ.நா. பொதுச் சபை - பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது என்பதை பிரிட்டன் தனது கருத்துக்கு ஆதரவாக முன்வைத்துள்ளது.
 ஆனால், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் சையது அக்பருதீன் பிரிட்டனின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐ.நா. பொதுச் சபையில் உள்ள நாடுகளின் உறுப்பினர்களின் மத்தியில் அவர் பேசுகையில், "நாம் இப்போது 21-ஆம் நூற்றாண்டில் இருக்கிறோம். சர்வதேச நீதிமன்றத் தேர்தலில் இப்போதையை விதிகளைக் கைவிட்டு, சுமார் 100 ஆண்டுக்கு முன்பு இருந்த வழக்கத்தை மீண்டும் கொண்டுவர நினைப்பது ஏன்?' என்று கேள்வி எழுப்பினார்.
 சர்வதேச நீதிமன்ற நீதிபதியைத் தேர்வு செய்வதற்கான 12-ஆவது சுற்று வாக்குப்பதிவு நியூயார்க்கில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com