லாஸ் வேகாஸ்: தாக்குதலில் ஈடுபட்ட பேட்டாக் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் 59 பேர் பலியாவதற்குக் காரணமாக இருந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரைப் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் விசாரணையில் கிடைத்துள்ளன.
லாஸ் வேகாஸ்: தாக்குதலில் ஈடுபட்ட பேட்டாக் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் 59 பேர் பலியாவதற்குக் காரணமாக இருந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரைப் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் விசாரணையில் கிடைத்துள்ளன.

அமெரிக்காவின்  நெவாடா மாகாணம், லாஸ் வேகாஸ் நகரில் திறந்த வெளி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கத்திய இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது இசை நிகழ்ச்சிக்கு வந்த கூட்டத்தினரை நோக்கி அந்தப் பகுதியிலிருந்த ஹோட்டல் கட்டடத்தின் 32-ஆவது மாடியிலிருந்து ஸ்டீபன் பேட்டாக் (64) என்ற நபர் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார். 

அந்தத் தாக்குதலில் 59 பேர் பலியாகினர். மேலும் 527 பேர் காயமடைந்தனர்.

மிக மோசமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்ட ஸ்டீபன் பேட்டாக் பற்றிய தகவல்கள் காவல்துறை விசாரணையில் வெளியாகியுள்ளது.

அதாவது, 64 வயதான ஸ்டீபன் பேட்டாக், கணக்காளராக இருந்து ஓய்வு பெற்றவர். ஏராளமான சொத்துக்களுக்கு சொந்தக்காரர். லாஸ் வேகாஸில் உள்ள காஸினோக்களுக்கு அடிக்கடி செல்லும் பழக்கம் கொண்டிருந்தார்.

இவருக்கு திருமணமாகி பேரக் குழந்தைகள் இருப்பதாகவும், தற்சமயம் பெண் தோழியுடன் வசித்து வந்த பேட்டாக், அடிக்கடி, தனது 90 வயது தாய்க்கு பிஸ்கெட்டுகளை அனுப்பி வந்துள்ளார்.

இதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பேட்டாக்கின் தந்தை ஒரு வங்கிக் கொள்ளையர் என்பதுதான். வங்கிகளில் கொள்ளையடித்து, எஃப்பிஐயால் தேடப்பட்டு வந்த 10 மிக முக்கிய கொள்ளையர்களில் ஒருவரான பெஞ்சமின் ஹோஸ்கின்ஸ் பேட்டாக்கின் மகன்தான் இந்த ஸ்டீபன் பேட்டாக். 

ஆனால், ஸ்டீபன் பேட்டாக் மீது இதுவரை எந்த ஒரு கிரிமினல் குற்றங்களும் பதிவாகவில்லை.

அமெரிக்காவின் 4 மாகாணங்களில் பேட்டாக்குக்கு வீடுகள் இருந்தாலும், ஹோட்டல்களிலேயே அவர் தங்கியுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை, ஃப்ளோரிடாவில் பேட்டாக்கின் பக்கத்துவீட்டுக்காரராக இருந்த  டொனால்ட் ஜூடி கூறுகையில், பேட்டாக்கின் வீட்டுக்குள் சென்று பார்த்தால், ஏதோ கல்லூரி மாணவன் தங்கியிருக்கும் வீடு போல, இரண்டு நாற்காலிகள், ஒரு கட்டில் மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பேட்டாக் வைத்திருந்த ஆயுதங்களில் சுமார் 42 துப்பாக்கிகள் உரிமம் பெற்று வாங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நேவாடாவில் பேட்டாக்குக்கு சொந்தமான இரண்டு வீடுகள் உள்ளன. இவருக்கு சொந்தமாக இரண்டு விமானங்களும் இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் தனியார் விமான பைலட்டுக்கான உரிமமும் பேட்டாக் வைத்திருந்தார்.

இவ்வளவு விஷயங்கள் தெரிந்தாலும், மிக மோசமான தாக்குதலில் ஈடுபட்டு 50க்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்கும், நூற்றுக்கணக்கானோர் காயமடையவும் காரணமான இந்த தாக்குதலை நடத்தியதன் பின்னணி என்ன என்பது மட்டும் இதுவரை அறியப்படவில்லை.

முன்னதாக நெவாடா மாகாணத்தில் உள்ள மெஸ்கீட் நகரில் அந்த நபருக்கு சொந்தமான வீட்டில் காவல் துறையினர் நடத்திய சோதனையின்போது அங்கு அவர் ஏராளமான ஆயுதங்களைக் குவித்து வைத்திருந்தார் என்பது தெரிய வந்தது. இயந்திரத் துப்பாக்கிகள் உள்பட 19 துப்பாக்கிகள் அந்த வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. மேலும் ஆயிரக்கணக்கான தோட்டாக்கள், ஏராளமான வெடிகுண்டுகள் அங்கு இருந்தன. பெரும் குண்டு வெடிப்பை நிகழ்த்தும் அளவுக்கு ஏராளமான வெடி மருந்து அந்த வீட்டிலிருந்தும், அங்கு இருந்த அவருடைய காரிலிருந்தும் கண்டெடுக்கப்பட்டன. 

அந்த வீட்டில் இருந்த சில மின்னணு சாதனங்களையும் காவல் துறையினர் கைப்பற்றினர். அவை கணினி போன்ற சாதனங்களா என்ற தகவலை வெளியிட காவல் துறையினர் மறுத்துவிட்டனர்.

மேண்டலே பே என்னும் ஹோட்டல் கட்டடத்தின் 32-ஆவது மாடியிலிருந்த ஜன்னலை சுட்டு வீழ்த்திவிட்டு, அங்கிருந்து கூட்டத்தினரை நோக்கிச் சுட்டார். 

சம்பவம் நடந்தபோது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடித்த அதிரடிப் போலீஸார் உடனடியாக மேண்டலே பே ஹோட்டல் கட்டடத்தின் 32-ஆவது மாடிலிருந்த அறையை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு துப்பாக்கிக் குண்டு காயத்துடன் ஸ்டீபன் பேட்டாக் உடலைக் கண்டனர். போலீஸார் அறைக் கதவை உடைத்து உள்ளே வரும் முன்னரே அவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்தார் என்று தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com