லாஸ் வேகாஸில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வீட்டில் ஆயுதக் குவியல்: பலி எண்ணிக்கை 59-ஆக உயர்வு; 527 பேர் காயம்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் 59 பேர் பலியாவதற்குக் காரணமாக இருந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரின் வீட்டில் ஆயுதக் குவியலை காவல் துறையினர் கண்டெடுத்தனர்.
லாஸ் வேகாஸில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வீட்டில் ஆயுதக் குவியல்: பலி எண்ணிக்கை 59-ஆக உயர்வு; 527 பேர் காயம்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் 59 பேர் பலியாவதற்குக் காரணமாக இருந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரின் வீட்டில் ஆயுதக் குவியலை காவல் துறையினர் கண்டெடுத்தனர்.
அந்நாட்டின் நெவாடா மாகாணம், லாஸ் வேகாஸ் நகரில் திறந்த வெளி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கத்திய இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது இசை நிகழ்ச்சிக்கு வந்த கூட்டத்தினரை நோக்கி அந்தப் பகுதியிலிருந்த ஹோட்டல் கட்டடத்தின் 32-ஆவது மாடியிலிருந்து ஸ்டீபன் பேட்டாக் (64) என்ற நபர் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார். 
அந்தத் தாக்குதலில் 59 பேர் பலியாகினர். மேலும் 527 பேர் காயமடைந்தனர்.
நெவாடா மாகாணத்தில் உள்ள மெஸ்கீட் நகரில் அந்த நபருக்கு சொந்தமான வீட்டில் காவல் துறையினர் நடத்திய சோதனையின்போது அங்கு அவர் ஏராளமான ஆயுதங்களைக் குவித்து வைத்திருந்தார் என்பது தெரிய வந்தது. இயந்திரத் துப்பாக்கிகள் உள்பட 19 துப்பாக்கிகள் அந்த வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. மேலும் ஆயிரக்கணக்கான தோட்டாக்கள், ஏராளமான வெடிகுண்டுகள் அங்கு இருந்தன. பெரும் குண்டு வெடிப்பை நிகழ்த்தும் அளவுக்கு ஏராளமான வெடி மருந்து அந்த வீட்டிலிருந்தும், அங்கு இருந்த அவருடைய காரிலிருந்தும் கண்டெடுக்கப்பட்டன. அந்த வீட்டில் இருந்த சில மின்னணு சாதனங்களையும் காவல் துறையினர் கைப்பற்றினர். அவை கணினி போன்ற சாதனங்களா என்ற தகவலை வெளியிட காவல் துறையினர் மறுத்துவிட்டனர்.
மேண்டலே பே என்னும் ஹோட்டல் கட்டடத்தின் 32-ஆவது மாடியிலிருந்த ஜன்னலை சுட்டு வீழ்த்திவிட்டு, அங்கிருந்து கூட்டத்தினரை நோக்கிச் சுட்டார். 
சம்பவம் நடந்தபோது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடித்த அதிரடிப் போலீஸார் உடனடியாக மேண்டலே பே ஹோட்டல் கட்டடத்தின் 32-ஆவது மாடிலிருந்த அறையை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு துப்பாக்கிக் குண்டு காயத்துடன் ஸ்டீபன் பேட்டாக் உடலைக் கண்டனர். போலீஸார் அறைக் கதவை உடைத்து உள்ளே வரும் முன்னரே அவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்தார் என்று தெரிய வந்தது.

தாக்குதலை நிகழ்த்திய ஸ்டீபன் பேட்டாக்.
தாக்குதலை நிகழ்த்திய ஸ்டீபன் பேட்டாக்.


செப். 28-ஆம் தேதியிலிருந்து அந்த அறையில் அவர் தங்கியிருந்தார். பல முறை ஹோட்டல் கட்டடத்தைவிட்டு வெளியேறி சுமார் 25 பெட்டிகளை அவர் அந்த அறைக்குக் கொண்டு வந்துள்ளார் என்று தெரிகிறது. அந்த ஹோட்டல் அறையிலிருந்து மட்டுமே 23 இயந்திரத் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன.
அதே மாகாணத்தின் வடக்குப் பகுதியில் ஸ்டீபன் பேட்டாக்குக்கு சொந்தமாக மற்றொரு வீடு உள்ளது. அந்த வீட்டில் காவல் துறையினர் நடத்திய சோதனை குறித்த விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. 
அவருடைய தோழி என்று அறியப்படும் மேரிலூ டேன்லி (62) என்ற நபருக்கு இந்தத் தாக்குதலுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று லாஸ் வேகாஸ் ஷெரீஃப் ஜோசப் லொம்பார்டோ கூறினார்.
ஸ்டீபன் பேட்டாக்கின் தந்தை வங்கித் திருட்டுகளில் ஈடுபட்டு சிறை சென்றவர் என்று தெரிய வந்துள்ளது. பொழுதுபோக்கு சூதாட்ட விடுதிகளால் உலகப் புகழ் பெற்ற லாஸ் வேகாஸ் நகரில் மிக அதிகத் தொகையைப் பந்தயமாக வைத்து ஸ்டீபன் பேட்டாக் சூதாடுவது வழக்கம். அவர் கணக்காளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தோழி


ஸ்டீபன் பேட்டாக்கின் தோழி என்று அறியப்படும் மேரிலூ டேன்லி (62) ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் என்று அந்நாட்டு காவல் துறையினர் தெரிவித்தனர். லாஸ் வேகாஸ் நகரில் உள்ள புகழ் பெற்ற பொழுதுபோக்கு சூதாட்ட விடுதிகளில் பணியாற்றும் எண்ணத்துடன் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஆஸ்திரேலியாவைவிட்டு வெளியேறினார். லாஸ் வேகாஸில் உள்ள ஏதேனும் சூதாட்ட விடுதியில் ஸ்டீபனும் மேரிலூவும் சந்தித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மெஸ்கீட் நகரில் உள்ள ஸ்டீபனின் வீட்டில் அவர்கள் இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் வீட்டில் நடைபெற்ற சோதனையின் அடிப்படையில் மேரிலூ குறித்து நெவாடா மாகாண போலீஸாருக்கு தெரிய வந்தது. அவர் அமெரிக்காவில் இல்லை என்றும் தெரிந்தது. தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில் அவர் பிலிப்பின்ஸ் அல்லது ஜப்பான் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 
துப்பாக்கிச் சூடு நடைபெறுவதற்குப் பல நாட்கள் முன்னதாகவே மேரிலூ டேன்லி அமெரிக்காவலிருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் அவருக்கும் தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் போலீஸார் முடிவு செய்தனர். தற்போது அவர் தேடப்படும் குற்றவாளி அல்ல என்று அமெரிக்க காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
லாஸ் வேகாஸ் தாக்குதலை நிகழ்த்திய ஸ்டீபன் பேட்டாக் தங்கள் படையைச் சேர்ந்த வீரர் என்று இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கம் தெரிவித்திருந்தது. ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com