ஐ.நா.வில் மீண்டும் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தான்: இந்தியா பதிலடி

ஐ.நா.வில் மீண்டும் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியது. அதற்கு, இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

ஐ.நா.வில் மீண்டும் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியது. அதற்கு, இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாஸி, காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியிருந்தார். காஷ்மீர் மக்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் அடக்குமுறையை கையாள்வதாக குற்றம்சாட்டிய அவர், இதுகுறித்து விசாரிக்க சர்வதேச குழுவை அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், காஷ்மீர் தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை இந்தியா செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக, ஐ.நா. சிறப்பு தூதரை நியமிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தான் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 'பாகிஸ்தான், ஒரு அப்பட்டமான பயங்கரவாத நாடு; தனது நாட்டில் பயங்கரவாதத்தை செழிக்க வைத்து, உலகெங்கும் ஏற்றுமதி செய்கிறது' என்று சுஷ்மா தெரிவித்தார். 
இந்நிலையில், ஐ.நா.வில் புதன்கிழமை நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில், பாகிஸ்தான் மீண்டும் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது. இதுதொடர்பாக, ஐ.நா.வுக்கான அந்நாட்டின் நிரந்தர பிரதிநிதி மலீஹா லோதி பேசியதாவது:
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் துல்லியத் தாக்குதலை நடத்தியதாக, இந்தியா பொய்யான தகவலை கூறி வருகிறது. மேற்கொண்டு துல்லியத் தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் மிரட்டி வருகிறது. பாகிஸ்தானுடன் பிரச்னையை தூண்ட வேண்டும் என்ற நோக்கில் இந்தியா இவ்வாறு செயல்படுகிறது. இந்தியாவின் இதுபோன்ற மிரட்டல்களை, ஐ.நா. கவனத்தில் கொள்ள வேண்டும். எல்லையில் அத்துமீறல்களில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்துமாறு இந்தியாவுக்கு சர்வதேச சமூகம் அறிவுறுத்த வேண்டும்.
எல்லையில் தொடர்ந்து அத்துமீறினால், இந்தியாவுக்கு பொருத்தமான, வலுவான பதிலடி தரப்படும். பாகிஸ்தானின் தற்காப்புத் திறனையும், உறுதியையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.
காஷ்மீரில் பயங்கரவாதத்தை பரப்புவது இந்தியாதான். பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் காஷ்மீர் மக்களுக்கு எதிராக மனிதாபிமானமற்ற குற்றங்கள் இழைக்கப்பட்டு வருகின்றன. இதனை மூடி மறைக்கவும், சர்வதேச நாடுகளை திசை திருப்பவும், எல்லையில் தினமும் அத்துமீறல்களில் இந்தியா ஈடுபட்டு வருகிறது என்றார் மலீஹா லோதி.
கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தின்போது, காஷ்மீர் விவகாரம் தொடர்பான பாகிஸ்தானின் கொள்கைக்கு எந்த நாடும் ஆதரவு தெரிவிக்கவில்லை. என்றபோதிலும், காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் பாகிஸ்தான் எழுப்பியுள்ளது.
இந்தியா பதிலடி: இதனிடையே, பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதற்கான உரிமையை பயன்படுத்தி, ஐ.நா.வுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மை செயலர் ஈனாம் காம்பீர் பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது:
பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள், பாலைவனத்தில் தனித்துவிடப்பட்டவரின் புலம்பலை போன்றது. பாகிஸ்தானின் கூற்றுகள், கட்டுக்கதை என்பதால் அவை ஐ.நா.வின் கவனத்தை ஈர்க்கவில்லை. எனினும், தனது கூற்றுகளை உயிர்ப்போடு வைத்திருப்பதாக, தந்திர நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்கிறது. அதுபற்றி விவாதித்து, இக்கூட்டத்தின் பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com