பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற வாய்ப்புள்ளவர்களின் பட்டியலில் ரகுராம் ராஜன் பெயர்

கிளாரிவேட் அனலிடிக்ஸ் தயாரித்த பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற வாய்ப்புள்ளவர்களின் பட்டியலில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் பெயர் இடம்பெற்றுள்ளது. 
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற வாய்ப்புள்ளவர்களின் பட்டியலில் ரகுராம் ராஜன் பெயர்


புது தில்லி: கிளாரிவேட் அனலிடிக்ஸ் தயாரித்த பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற வாய்ப்புள்ளவர்களின் பட்டியலில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் பெயர் இடம்பெற்றுள்ளது. 

நோபல் பரிசுக் குழு வெளியிட்டிருக்கும் தகவலின்படி,  பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோல்மில் வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்பட உள்ளது.

பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் கிளாரிவேட் அனலிடிக்ஸ், நோபல் பரிசு வெல்ல வாய்ப்புள்ளவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட நோபல் பரிசுகளின் அடிப்படையிலும் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ரகுராம் ராஜன் உட்பட 6 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

தற்போது சிகாகோ பல்கலைக்கழகத்தின் பூத் ஸ்கூல் ஆப் பிசினஸில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார் ரகுராம் ராஜன்.

ரகுராம் ராஜனின் 3 ஆண்டுகள் ஆர்பிஐ ஆளுநர் பதவி கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதியோடு நிறைவு பெற்றது. அவரது பணி அனுபவம் தொடர்பாக புத்தகம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

வாராக்கடன்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து புரட்சியை ஏற்படுத்தியிருந்த ரகுராம் ராஜன், இந்திய வங்கிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான பணிகளை நிறைவு செய்து முடிக்கும் வரையிலும், ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் நீடிக்க விரும்பியதாகவும் கருத்துக் கூறியிருந்தார்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தபோது, சர்வதேச செலாவணி நிதியத்தின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சிக்கு வந்தபிறகு, மத்திய அரசுக்கும், ரகுராம் ராஜனுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அவரை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்தார். இதேபோல், நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து வருவதாக ரகுராம் ராஜன் கருத்து வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ரகுராம் ராஜனின் 3 ஆண்டு பதவிக்காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அவரது பதவிக்காலத்தை மத்திய அரசு நீட்டிக்கவில்லை. இதேபோல், ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ஒருவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் பூர்த்தியாகாதது, கடந்த 1992-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதன்முறையாகும்.

இதையடுத்து, அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்கு ரகுராம் ராஜன் மீண்டும் திரும்பினார்.

இந்நிலையில், தில்லியில் பிடிஐ செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியில், சிகாகோ பல்கலைக்கழகம் தனக்கு அளித்த விடுமுறையை நீட்டிக்காததால்தான், ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் தாம் தொடர முடியாததற்கு காரணம் என்று கூறப்படுவதை மறுத்தார். 

இந்திய வங்கிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான நிறைவு செய்யப்படாத பணிகளை செய்து முடிக்கும் வரையிலும், ரிசர்வ் வங்கி கவர்னர் பணியில் நீடிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

ஆனால், எனது பணியை நீட்டிப்பது தொடர்பான திட்டத்தை மத்திய அரசு முன்வைக்கவில்லை. இதற்காக மத்திய அரசிடம் போய் நான் கெஞ்சவில்லை. ஆனால், ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் நீடிக்க விரும்புவதை நான் மத்திய அரசிடம் சூசகமாக வெளிப்படுத்தினேன்.

எனக்கு 3 ஆண்டுகள் மட்டுமே பதவிக்காலம் அளிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசால் எனக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தம் அதுவாகும். அந்த 3 ஆண்டு காலம் முடிவடைந்து விட்டது; அவ்வளவுதான். இதுதவிர வேறு எதுவும் கிடையாது. தற்போது நான் வேறொரு பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறேன் என்றார் ரகுராம் ராஜன்.

அப்போது, "ரகுராம் ராஜன் முழு அளவிலான இந்தியர் கிடையாது; பணவீக்கம் தொடர்பான அவரது கொள்கையே, இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது' என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியது குறித்தும், இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க விரும்பினீர்களா? என்றும் கேட்கப்பட்டது.

அதற்கு ரகுராம் ராஜன், "இல்லை. சில விஷயங்களில் மௌனமாக இருப்பதுதான் நல்லது. இதுபோன்ற விஷயங்களில் நாம் கவனம் செலுத்தினோல், தகுதிக்கு மீறிய முக்கியத்துவத்தை அந்த விஷயத்துக்கு அளிப்பது போலாகிவிடும்" என்று பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com