விளாடிமிர் புதினுக்கு செக் வைப்பாரா.. இன்டர்நெட் எலி என விமரிசிக்கப்படும் அலெக்ஸி நவால்னி!

மாஸ்கோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, புஷ்கின் சதுக்கத்தில் கூடிய நூற்றுக்கணக்கான ரஷ்யர்கள், 41 வயதாகும் வழக்குரைஞர் அலெக்ஸி நவால்னியை, அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கோரி ப
விளாடிமிர் புதினுக்கு செக் வைப்பாரா.. இன்டர்நெட் எலி என விமரிசிக்கப்படும் அலெக்ஸி நவால்னி!

மாஸ்கோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, புஷ்கின் சதுக்கத்தில் கூடிய நூற்றுக்கணக்கான ரஷ்யர்கள், 41 வயதாகும் வழக்குரைஞர் அலெக்ஸி நவால்னியை, அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதினின் 65வது பிறந்த நாளன்று, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், அலெக்ஸி நவால்னி மீது தொடுக்கப்பட்ட பண மோசடி வழக்கைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், அவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வலியுறுத்தியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபோன்ற போராட்டங்கள், புதினின் ரஷ்யாவுக்கு புதிதில்லை. 6 மாதங்களுக்கு முன்பு மார்ச் மாதம் இதேப்போன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடி ஊழலுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.

ஞாயிற்றுக்கிழமை  கூடிய இளைஞர்களும், "புதின் ஒரு திருடன்",  "புதின் இல்லாத ரஷ்யா" என்ற கோஷங்களை எழுப்பினர். 20 வயது முதல் 30 வயது வரையிலான இளைஞர், இளைஞிகளை அதிகம் கொண்ட இந்த போராட்டம், ஊழலுக்கு எதிராகவும், பொருளாதார விஷயங்களுக்கான போராட்டமாகவும் பதிவானது. இத்தனை பேர் இங்கே கூடியிருக்க ஒரே ஒருவர்தான் காரணம். அவர்தான் ரஷ்யாவின் எதிர்க்கட்சியான முற்போக்குக் கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி.

சோவியத் ஒன்றியத்தின் கடைசி அதிபர் மிக்கைல் கோர்பச்சேவ்-வின் ரசிகர்
ரஷ்யாவின் தாராளமயமாக்கல் கொள்கையின் ஒரே நம்பிக்கையாக விளங்குபவர்  அலெக்ஸி நவால்னி. 2008ம் ஆண்டு தனது பிளாக்குகள் மூலம் இளைஞர்கள் மத்தியில் புகழ்பெற்றார். ரஷ்யாவில் நடைபெற்ற ஊழல்களை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் அமைந்திருந்தன பிளாக் கட்டுரைகள். தொடர்ந்து அவரது ஆதரவாளர்களின் எண்ணிக்கை நூறில் இருந்து ஆயிரத்தைத் தாண்டி லட்சக்கணக்கில் மாறியது.

புதிய ரஷ்யா என்ற பார்வை கொண்டிருந்த அலெக்ஸி நவால்னிக்கு ஏராளமான இளைஞர்கள் ஆதரவளித்தனர்.

1976ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி பிறந்த நவால்னி, எல்ட்சின்-இன் மிகப்பெரிய ரசிகர். அதே சமயம், கோர்பசேவ்வின் கொள்கைகளாலும் அதிகம் ஈர்க்கப்பட்டவர். மேற்கத்திய பாணியில் தாராளமய ஜனநாயகம் போன்றவை குறித்து கோர்பசேவ் மற்றும் எல்ட்சின் இருவருமே அதிகமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். ஆனால், அவர்களது அனைத்துக் கருத்துக்களையுமே ரஷ்யா எதிர்காலத்துக்கு பொருத்திக் கொள்ள முடியாது என்று நாவல்னி கூறுகிறார்.

நாவல்னியின் பெற்றோருக்கு அரசியலில் எந்த ஈடுபாடும் இல்லை. சொந்தமாக தொழிற்சாலை நடத்தி வருபவர்கள். நாவல்னியும், எதிர்காலத்தில் தந்தையின் தொழிற்சாலையை எடுத்து நடத்தவே விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் சூழ்நிலை வேறு விதமாக இருக்கிறது. ரஷ்ய அரசியலை நெருங்கிப் பார்த்து வரும் நாவல்னி விரைவில் அல்லது சிறிது காலத்தில் தீவிர அரசியலில் நுழைய வேண்டியது இருக்கும்.

வழக்குரைஞராக படிப்பை முடித்ததுமே யப்லோகோ கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் நவால்னி. ஒரு பக்கம் சிறந்த பிளாகர் மற்றொரு பக்கம் அரசியல் கட்சியின் தொண்டர் என பல காலம் அவரது வாழ்க்கைப் பயணம் நீண்டது.

2011ம் ஆண்டுதான் நாவல்னி ஒரு தேசியத் தலைவராக அறிமுகமாகிறார். துமாவில் தேர்தல் நடக்கிறது. புதினின் ஐக்கிய ரஷ்ய கட்சி 77 சதவீத இடங்களைப் பிடிக்கிறது. 7 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனில் நடந்ததைப் போலவே, தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக தேர்தல் முடிவு அமைந்திருந்தது. வாக்கு எண்ணிக்கையின் போது பல தில்லுமுல்லுகள் நடந்ததும் தெரிய வந்தது. ஊடகங்களும் இதனை மிகக் கடுமையாக சாடின. மக்களும் சாலையில் இறங்கி போராடினார்கள்.

ஒரு சமயம், மத்திய மாஸ்கோவில் மிகப்பெரிய பேரணிக்கு நவால்னி அழைப்பு விடுத்திருந்தார். அப்போது அவர் பேசியதாவது, என்னை இன்டர்நெட்டில் விளையாடும் வெள்ளை எலி என்கிறார்கள். ஆமாம், அது சரிதான். நான் இன்டர்நெட் வெள்ளை எலிதான். அவர்களது தொண்டையைக் கடித்துக் குதறப்போகும் வெள்ளை எலி என்று பேசினார்.

அரசியல் கொலைகள் ரஷ்யாவுக்கு புதிதில்லை. விளாடிமிர் புதினுக்கு எதிராகக் கைத் தூக்கிய பலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் அல்லது கொலை செய்யப்பட்டுள்ளனர். மைக்கைல் கோடோகோவ்ஸ்கி, அண்ணா பொலிட்கோவ்ஸ்கயா போன்றோரே இதற்கு உதாரணம். 

2012ம் ஆண்டில் தேர்தலில் போட்டியிடுவதை நவால்னி தவிர்த்துவிட்டார்.  பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் ப்ராக்ரஸ் கட்சியினால் வழங்கப்பட்டது. ஆனால், நவால்னி மீதான வழக்குகள், அவரை தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்துவிட்டன.

ஆனால், 2013ல் நிலைமை மாறியது. போராட்டங்களும், இளைஞர்களின் எழுச்சியும், நவால்னியை தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்யும் அதிகாரிகளை அசைத்துப் பார்த்தது. மாஸ்கோ மாநகரத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். க்ரெம்லினை எதிர்த்து களம் கண்ட மிக முக்கிய போட்டியாளராக விளங்கினார். ஆனாலும் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தேர்தல் முடிவு பொய்யானது என்று கூறினார். நவால்னி. அடுத்த சில ஆண்டுகள், நவால்னிக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டன. ஒரு சமயம் ஒரு மாத காலத்துக்கும் மேலாக அவர் வீட்டுக் காவலிலும் வைக்கப்பட்டிருந்தார்.

எத்தனையோ கெடுபிடிகள் அவருக்கு எதிராக விதிக்கப்பட்டாலும், மனம் தளராத நவால்னி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக பகிரங்கமாக அறிவித்தார். அவ்வளவுதான், ஒரு பண மோசடி வழக்கில் அவர் கைதாகிறார், அரசுத் துறை நிறுவனத்தின் வழக்குரைஞராக இருந்த போது பல ஆயிரம் டாலர்களை அவர் திருடியதாக வழக்குப் போடப்பட்டு 5 ஆண்டுகள் அரசியலில் ஈடுபடுவதற்கு தடை விதித்து தண்டனை அறிவிக்கப்படுகிறது.

நவால்னி ஒன்றும் துறவி அல்ல, அவரை எது நடத்தி வந்ததோ, அது வெளிப்பட்டது. ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். ரஷ்யாவைக் காக்கும் சக்தி தன்னிடம் மட்டுமே இருப்பதாக அவர் காட்டிக் கொண்டார். 

மேலும், நவால்னி தனது கொள்கையில் தெளிவாக இருக்கிறார். ஊழலற்ற மற்றும் தாராளமயமாக்கப்பட்ட நிர்வாகத்தைக் கொண்டு வருவது குறித்து இதுவரை பேசியுள்ளார், எழுதியுள்ளார். அவர் ரஷ்யாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் எண்ணம் கொண்டுள்ளார்.

ரஷ்யாவை அதன் முக்கிய விஷயங்களை நோக்கிச் செல்லும் பாதையில் பயணிக்கச் செய்ய நவால்னி திட்டமிட்டுள்ளார். ரஷ்யாவில் இருந்து ஊழலையும், மோசமான பொருளாதாரக் கொள்கைகளையும் ஒழிக்க முடிவு செய்துள்ளார். பார்க்கலாம்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com