அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் சேர முடியாது: ஐநா}வில் இந்தியா திட்டவட்டம்

அணு ஆயுதமற்ற நாடு என்ற முறையில் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் சேர முடியாது என்று ஐநா பொதுச் சபையில் இந்தியா உறுதிபடத் தெரிவித்துள்ளது.

அணு ஆயுதமற்ற நாடு என்ற முறையில் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் சேர முடியாது என்று ஐநா பொதுச் சபையில் இந்தியா உறுதிபடத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐநா. பொதுச் சபையில் ஆயுத குறைப்பு மாநாட்டுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி அமன்தீப் சிங் கில்
வியாழக்கிழமை பேசியதாவது:
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் அணு ஆயுதங்களற்ற நாடு என்ற முறையில் இந்தியா சேரும் கேள்விக்கே இடமில்லை. இந்த ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு அனைவரும் அறிந்ததுதான். அதை மீண்டும் வலியுறுத்திக் கூற வேண்டிய அவசியமில்லை.
அதே வேளையில், உலகளாவிய அணு ஆயுதப் பரவல் தடை நோக்கங்களை வலுப்படுத்த வேண்டியதை இந்தியா ஆதரிக்கிறது. குறிப்பாக அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் உள்ளிட்ட உடனன்பாடுகளில் 
கையெழுத்திட்டுள்ள நாடுகள் தங்கள் கடமைப் பொறுப்புகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதை இந்தியா ஆதரிக்கிறது.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாதபோதிலும், அந்த ஒப்பந்தத்தின் கொள்கைகளுக்கும், நோக்கங்களுக்கும் இந்தியா கட்டுப்படுகிறது. மேலும் அணு ஆயுதப் பரவல் தடுப்பை வலுப்படுத்துவதற்கு தனது பங்களிப்பை ஆற்றவும் இந்தியா உறுதிபூண்டுள்ளது.
இந்த விவகாரத்தில் எங்களது செயல்திட்டத்தை நாங்கள் காலத்துக்கு ஏற்ப வகுத்துள்ளோம். அதேபோல் எங்கள் நண்பர்களும் தங்கள் செயல்திட்டத்தை வகுப்பார்கள் என்றும் அணு ஆயுதப் பரவல் மற்றும் ஆயுதக் குறைப்பு ஆகியவற்றின் அமலாக்கத்தில் உள்ள குறைபாடுகளைக் களைவதில் கவனம் செலுத்துவார்கள் என்றும் நம்புகிறோம்.
ஒரு பொறுப்புள்ள அணு ஆயுத வல்லரசு என்ற முறையில் இந்தியா நம்பகமான குறைந்தபட்ச தடுப்புக் கொள்கையைக் கொண்டுள்ளது. அதாவது எந்த நாட்டின் மீதும் முதலில் இந்தியா அணு ஆயுதத் தாக்குதல் நடத்தாது என்பதும் அணு ஆயுதமற்ற நாட்டின் மீது அந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்பதும் எங்கள் கொள்கையாகும்.
மேலும், அணுகுண்டு சோதனை நடத்துவதிலும் சுயக் கட்டுப்பாட்டை பராமரிப்பதிலும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் . அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதற்கான விவாதங்களில் இந்தியா பங்கேற்றதில்லை. எனவே அந்த ஒப்பந்தத்தின் கீழ் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் இந்தியாவைக் கட்டுப்படுத்தாது. கடந்த காலங்களைப் போலவே, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளுடன் இணைந்து அணு ஆயுத ஒழிப்பு என்ற இலக்கு விஷயத்தில் பலதரப்பு மன்றங்களில் பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது.
வட கொரியா சர்வதேச சமூகத்துக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி அணு ஆயுதச் சோதனைகளை நடத்துவது மிகவும் கவலையளிக்கிறது.இது போன்ற நடவடிக்கைகளில் இருந்து அந்நாடு விலகியிருக்க வேண்டும். ஏனெனில் இத்தகைய நடவடிக்கைகள் கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com