அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி இலங்கையில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த 2009 மே மாதம் வரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி அந்நாட்டின் யாழ்ப்பாணம் நகரில் தமிழர்கள்

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த 2009 மே மாதம் வரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி அந்நாட்டின் யாழ்ப்பாணம் நகரில் தமிழர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
யாழ்ப்பாணம் நகரில் உள்ள ஆளுநரின் செயலகத்துக்கு எதிரே ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டனர். அவர்கள் "பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கு' , "அனைத்து அரசியல் கைதிகளையும் எந்த நிபந்தனையுமின்றி விடுதலை செய்' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். அதேபோல், வடக்கு மாகாணத்தில் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி முழு அடைப்பு அனுசரிக்கப்பட்டது. 
இதனிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், அதிபர் மைத்ரிபால சிறீசேனாவுக்கு எழுதிய கடிதத்தில், தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்திள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தமிழர்கள் பலரும் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதா, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டனவா, பதிவு செய்யப்படவில்லையா என்பதற்கு அப்பாற்பட்டு அவவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சுயவிருப்பத்துக்கு மாறாக இந்தக் கைதிகள் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே அவர்களுக்கு எதிரான சாட்சியமாக உள்ளது. இந்த வாக்குமூலங்கள் வழக்கமான நீதிமன்றங்களில் ஏற்கப்படாது.
கைதிகள் மீதான வழக்குகளில் பெரும்பாலானவவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இவ்வழக்குகளை அரசுத் தரப்பு முன்னெடுத்துச் செல்ல தயாராக இல்லாததே இதற்குக் காரணம் என்று அந்தக் கடிதத்தில் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தனி நாடு கோரி தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கிய பின், பயங்கரவவாதத் தடுப்புச் சட்டம் கடந்த 1979}இல் கொண்டுவரப்பட்டது. கடுமையான ஷரத்துகள் அடங்கிய இந்தச் சட்டத்தை நீக்குமாறு இலங்கையை சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வந்தன.
அந்நாட்டில் கடந்த 2009}இல் விடுதலைப் புலிகளை ராணுவம் தோற்கடித்ததைத் தொடர்ந்து 30 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது, எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமலேயே தனிநபர்களைக் காலவரையின்றி காவலில் வைக்க வழிசெய்வதால் அச்சட்டத்தை தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் எதிர்த்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com