நவாஸ் ஷெரீஃப் மீதான குற்றச்சாட்டுப் பதிவு 19-க்கு ஒத்திவைப்பு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீதான ஊழல் வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுப் பதிவு வரும் அக். 19-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
ஊழல் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை  ஆஜராக வரும் மரியம் நவாஸ்.
ஊழல் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை  ஆஜராக வரும் மரியம் நவாஸ்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீதான ஊழல் வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுப் பதிவு வரும் அக். 19-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணையின்போது அவர் மீதும் அவரது மகள், மருமகன் மீதும் குற்றச்சாட்டுப் பதிவு நடைபெறுவதாக இருந்தது.
நீதிமன்றத்துக்கு நவாஸ் ஷெரீஃப் வரவில்லை. பிரிட்டன் தலைநகர் லண்டனில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் அவருடைய மனைவி குல்ஸூமுக்கு உதவியாக இருக்க அவர் அங்கு சென்றுள்ளார். எனினும் நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம், மருமகன் முகமது சஃப்தர் ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்து காத்திருந்தனர்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் நீதிமன்ற வளாகத்தில் குவிந்திருந்தனர். நவாஸ் ஷெரீஃபை பழி வாங்கும் அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டதாக அவர்கள் கோஷம் எழுப்பினர். நீதிமன்றத்துக்கு எதிராகவும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.
நீதிமன்ற வளாகத்தில் பலத்த காவல் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, காவல் துறையினரின் கெடுபிடிகளால் தங்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டதாக வழக்குரைஞர்கள் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நவாஸ் ஷெரீஃபின் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்ற அறையிலும் வழக்குரைஞர்கள் கோஷம் எழுப்பினர்.
வழக்குரைஞர்களைக் காவல் துறையினர் தள்ளியதாகவும் காவல் துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் விசாரணை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் வழக்குரைஞர்கள் கோஷமிட்டனர். 
அப்போது ஊழல் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி முகமது பஷீர் தனது இருக்கையில் இருந்தார். மரியம், அவரது கணவர் முகமது சஃப்தர் ஆகியோரும் நீதிமன்ற அறையில் இருந்தனர்.
அமளியைத் தொடர்ந்து, நவாஸ் குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுப் பதிவை வரும் அக். 19-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி முகமது பஷீர் அறிவித்துவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.
பனாமா ஆவணங்கள் கசிவைத் தொடர்ந்து, அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினருக்கு வெளிநாட்டில் சொத்து இருப்பதாகத் தெரிய வந்தது. இதையடுத்து நடைபெற்ற உச்ச நீதிமன்ற விசாரணையின் முடிவில் நவாஸ் ஷெரீஃப் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்து நீதிமன்ற விசாரணை நடைபெற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பையடுத்து, நவாஸ் ஷெரீஃப் தனது பிரதமர் பதவியையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்தார்.
இதனிடையே அவரது மனைவி குல்ஸூம் தொண்டை புற்று நோய் பாதிப்புக்காக லண்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுவரை அவருக்கு தொண்டையில் மூன்று முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவருக்குத் துணையாக குடும்பத்தினர் லண்டனில் தங்கியிருந்தனர். தற்போது நவாஸ் லண்டனில் உள்ளார். ஊழல் வழக்கு விசாரணையில் நேரடியாக ஆஜராவதிலிருந்து அவர் விலக்கு பெற்றுள்ளார்.
நவாஸ் ஷெரீஃப் ராஜிநாமா செய்த லாகூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் குல்ஸூம் போட்டியிட்டு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மகள் மரியம் பிரசாரம் மேற்கொண்டு தாயை வெற்றி பெறச் செய்தார்.
ஊழல் வழக்கில் நவாஸின் மகன்கள் ஹசன், ஹுசேன் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு உள்ளபோதிலும் அவர்கள் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்கள் என்பதால் பாகிஸ்தான் நீதிமன்ற விசாரணையில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவார்கள் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com