வட கொரியாவில் திடீர் நிலநடுக்கம்

வட கொரியாவில் அணு ஆயுத சோதனை நடைபெறும் இடத்துக்கு அருகே மையம் கொண்டு வியாழக்கிழமை நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

வட கொரியாவில் அணு ஆயுத சோதனை நடைபெறும் இடத்துக்கு அருகே மையம் கொண்டு வியாழக்கிழமை நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1.41 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 4.41 மணி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை உலகெங்கும் பல்வேறு நாடுகளின் புவியியல் ஆய்வு மையங்களும் பதிவு செய்தன. ரிக்டர் அளவுகோலில் 2.9 அலகுகளாக இந்த நிலநடுக்கம் பதிவானது.
வட கொரியா வழக்கமாக பூமிக்கு அடியில் அணு குண்டு சோதனை செய்யும் இடத்துக்கு அருகே இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததால், அந்த நாடு புதிய அணு குண்டு சோதனையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அது இயற்கையான நிலநடுக்கம்தான் என்று பின்னர் உறுதி செய்யப்பட்டது.
முதலில் நிலநடுக்க விவரம் வெளியானதும் உலகெங்கும் அரசியல் அதிர்வலைகள் ஏற்பட்டன. ஆனால் அது இயற்கையான சம்பவம் என்று தெரிய வந்ததும் அந்த அதிர்வலைகள் ஓய்ந்தன. 
வட கொரியா தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடாவிட்டால் அந்த நாட்டையே அழிப்போம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் மிரட்டல் விடுத்தார். வட கொரியாவுக்கு அணு ஆயுதத் திறன் இருப்பதாகவும் தங்களால் அமெரிக்காவைத் தாக்க முடியும் என்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் பதிலுக்கு சவால் விடுத்தார். இந்தப் பதற்றமான சூழலில் நிலநடுக்க செய்தி வெளியானது. கடந்த செப். 3-ஆம் தேதி மிக சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டை பூமிக்கு அடியில் வெடித்து வட கொரியா பரிசோதனை செய்தது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவானது. அதன் தாக்கம் ஓயாமல் செப். 23-ஆம் தேதி மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 3.5 அலகுகளாகப் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற 2006-ஆம் ஆண்டு முதல் ஐந்து அணுகுண்டு சோதனைகளை வட கொரியா மேற்கொண்டுள்ளது. முதல் நிலத்தடி சோதனையையடுத்து ரிக்டர் அளவுகோலில் 4.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com