அரசுடன் கருத்து வேறுபாடு: விடுப்பில் சென்றார் வங்கதேச உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

வங்கதேச அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுரேந்திரகுமார் சின்ஹா நீண்ட விடுப்பில் சென்றார்.

வங்கதேச அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுரேந்திரகுமார் சின்ஹா நீண்ட விடுப்பில் சென்றார்.
வங்கதேசத்தின் முதல் ஹிந்து தலைமை நீதிபதி சுரேந்திரகுமார் சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நாடாளுமன்றம் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் தொடர்பாக நீதிபதி சுரேந்திரகுமார் சின்ஹா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு கடந்த ஜூலை மாதம் அளித்த தீர்ப்பு சர்ச்சைக்கு உள்ளானது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நாடாளுமன்றம் மூலம் பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை அந்நாட்டு அரசியல் சாசனத்தின் 16}ஆவது திருத்தச் சட்டம் அளிக்கிறது. அந்த திருத்தச் சட்டத்தை ரத்து செய்து கடந்த ஜூலையில் தீர்ப்பு வெளியானது. அப்போது முதல் அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே பனிப்போர் தொடங்கியது.
இதனிடையே, பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து அந்த நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பதவி பறி போனதைச் சுட்டிக் காட்டி தலைமை நீதிபதி சுரேந்திரகுமார் சின்ஹா பேசினார்.
இது அரசு மற்றும் ஆளும் கட்சி வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், பாகிஸ்தானுடன் வங்கதேசத்தை ஒப்பிட்டது பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஆத்திரமூட்டியது.
முதலில் நாடாளுமன்றத்தின் மாட்சிமையைக் குலைக்கும் வண்ணம் பேசியது மட்டுமல்லாமல், விரோத நாடான பாகிஸ்தானுடன் ஒப்பிட்டுப் பேசியது கசப்புணர்வை ஏற்படுத்தியது.
தலைமை நீதிபதி வங்கதேசத்தை சிறுமைப்படுத்தியதாகவும், நாடாளுமன்றத்தையும் நாட்டின் குடியரசுத் தலைவரையும் அவமதித்துவிட்டதாகவும், பிரதமர் குற்றம் சாட்டினார்.
"பாகிஸ்தானுடன் வங்கதேசத்தை ஒப்பிட்டுப் பேசியதற்காக தலைமை நீதிபதி வெட்கப்பட வேண்டும். தலைமை நீதிபதி ராஜிநாமா செய்ய வேண்டும்' என்று பிரதமர் ஷேக் ஹசீனா கூறினார்.
இந்த நிலையில் தலைமை நீதிபதி சுரேந்திரகுமார் சின்ஹா நீண்ட விடுப்பில் ஆஸ்திரேலியா சென்றார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு அவர் புறப்பட்டுச் சென்றார். அதற்கு முன் அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பது:
நான் இந்நாட்டு நீதித்துறையின் பாதுகாவலன் என்ற முறையில் நீதித் துறையின் நலனைக் கருத்தில் கொண்டு தற்போது விடுப்பில் செல்கிறேன். நீதித் துறை சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்ற அக்கறையும் கவலையும் எனக்கு உள்ளது. 
எனது உடல் நலனுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. விடுப்பில் செல்கிறேன், அவ்வளவுதான். விரைவில் திரும்பி வருவேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நீதித் துறையை அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தலைமை நீதிபதி சுரேந்திரகுமார் சின்ஹாவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரியுடன்
முடிவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com