இந்தியாவில் தனியுரிமைக்கு சாதகமான சூழல்: நந்தன் நிலகேணி

இந்தியாவில் தனிநபர் விவரங்கள் பாதுகாப்பு உரிமையை (பிரைவசி) நிலைநாட்டுவதற்குச் சாதகமான சூழல் நிலவி வருவதாக ஆதார் ஆணையத்தின் தலைவராக இருந்த நந்தன் நிலகேணி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தனியுரிமைக்கு சாதகமான சூழல்: நந்தன் நிலகேணி

இந்தியாவில் தனிநபர் விவரங்கள் பாதுகாப்பு உரிமையை (பிரைவசி) நிலைநாட்டுவதற்குச் சாதகமான சூழல் நிலவி வருவதாக ஆதார் ஆணையத்தின் தலைவராக இருந்த நந்தன் நிலகேணி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆதார் விவரச் சேகரிப்பு முறையை வடிவமைத்தவரான அவர், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது:
தனிநபர் விவரப் பாதுகாப்பைப் பொருத்தவரை, இந்தியாவில் மிகச் சாதகமான சூழல் நிலவி வருகிறது.
நாட்டில் ஆதார் அட்டைகளை அறிமுகம் செய்த பிறகு, தனிநபர் குறித்த தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாப்பது குறித்த சர்ச்சை, உச்ச நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டதும், உச்ச நீதிமன்றம் அந்த விவகாரம் தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை அளித்துள்ளதும் இந்தச் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
தனியுரிமை குறித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகள், இந்திய வரலாற்றில் இதுவரை அளிக்கப்பட்ட மிகச் சிறந்த தீர்ப்புகளில் சிலவாகும். தனியுரிமை என்பது குடிமக்களின் அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே நேரம், சில சமூக நோக்கங்களுக்காக சூழலுக்குத் தகுந்த வகையில் அந்த அடிப்படை உரிமையில் சில மாற்றங்களைச் செய்துகொள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தேசப் பாதுகாப்பு, குற்றத் தடுப்பு, சமூக நலன் போன்றவற்றை அரசுகள் பேணிக்காக்க முடியும். ஆதார் மின்னணு தகவல் சேகரிப்பு முறையால், தனிநபர்கள் விவரங்களைப் பாதுகாக்கும் அடிப்படை உரிமை பாதிக்கப்படாது என்பதில் சிலருக்குள்ள சந்தேகங்களை, ஆதார் அட்டை முறை வெற்றிகரமாப் போக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணிஆட்சியின்போது நந்தன் நிலகேணியின் மேற்பார்வையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை முறை, தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் முழுவீச்சுடன் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com