இந்தியத் துணைத் தூதருக்கு பாக். சம்மன்

எல்லையில் இந்திய ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதாகக் கூறி, இஸ்லாமாபாதில் உள்ள துணைத் தூதர் ஜே.பி.சிங்கை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேரில்

எல்லையில் இந்திய ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதாகக் கூறி, இஸ்லாமாபாதில் உள்ள துணைத் தூதர் ஜே.பி.சிங்கை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது.
இம்மாதத்தில் அவரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது இது 3-ஆவது முறையாகும்.
இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இரு நாடுகளுக்கு இடையே கடந்த 2003-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை இந்திய ராணுவம் அவ்வப்போது மீறி வருகிறது. எல்லையில் கோட்லி பகுதியில் அந்நாட்டு ராணுவம் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 2 சிறார்கள் உயிரிழந்துவிட்டனர்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீற வேண்டாம் என வலியுறுத்தியும், இந்திய ராணுவம் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து, அந்நாட்டு துணைத் தூதர் ஜே.பி.சிங்கை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அவரிடம், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு எதிராக பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் தங்கள் நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருவது வேதனையளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. 
இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்தால், பிராந்திய அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக கடந்த 2-ஆம் தேதியும், 4-ஆம் தேதியும் ஜே.பி.சிங்கை அழைத்து பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com