பிலிப்பின்ஸ்: மாராவி நகரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக குண்டு வீச்சு

பிலிப்பின்ஸின் மாராவி நகரில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் குண்டு வீச்சில் ஈடுபட்டு வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

பிலிப்பின்ஸின் மாராவி நகரில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் குண்டு வீச்சில் ஈடுபட்டு வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்று வரும் மோதலில் பொதுமக்கள் உள்பட சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்தது.
இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பிலிப்பின்ஸின் இஸ்லாமிய தீவிரவாதிகள் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக மாராவி நகரில் பதுங்கியுள்ளனர். முதலில் சுமார் ஐந்நூறு பயங்கரவாதிகள் அங்கு உள்ளனர் என்று கருதப்பட்டது. ஆனால் பயங்கரவாதிகளை ஒழிக்க ராணுவ நடவடிக்கை தொடங்கியதும் அங்கு இன்னும் கூடுதலாக பயங்கரவாதிகள் இருப்பதாகத் தெரிய வந்தது. இந்த நிலையில், ராணுவத்தினர் தொடர்ந்து தீவிரத் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் தாக்குதலைத் தொடங்கியுள்ள ராணுவத்தினர், விமானப் படை விமானத்தின் உதவியுடன் ஞாயிற்றுக்கிழமை குண்டு வீச்சு நிகழ்த்தியது.
இது தொடர்பாக ராணுவத் தனிப்படையின் துணை தளபதி ரோமியோ பிரானர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 
மாராவி நகரில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை முற்றிலுமாக அழிக்க இறுதிக்கட்ட நடவடிக்கையை ராணுவம் தொடங்கியுள்ளது. ராணுவ நடவடிக்கைக்குத் துணையாக விமானப் படையின் எஃப்ஏ50 போர் விமானம் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.
பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் தற்போது மிகச் சிறிய பகுதி மட்டுமே இருக்கிறது. ஐந்து ஏக்கர் பரப்பில் உள்ள சில கட்டடங்களில் அவர்கள் பதுங்கியிருந்து சண்டையிட்டு வருகின்றனர். அப்பகுதியிலுள்ள வீடுகளின் கூரையிலிருந்து ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.
சனிக்கிழமை நடைபெற்ற சண்டையில் 20 வீரர்கள் காயமடைந்தனர். கடந்த மே மாதம் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தொடங்கியதிலிருந்து இதுவரை 822 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். காவல் துறையினர், பாதுகாப்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 162 பேர் பலியாகினர். மேலும் 47 பொதுமக்களும் உயிரிழந்தனர்.
தற்போது பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அவர்களைத் தவிர மேலும் சுமார் 100 பேர் இருக்கலாம் என்று நம்புகிறோம். அதில் பயங்கரவாதிகளின் குடும்பத்தினர், பிணைக் கைதிகள் அடங்குவர். பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் ஆயுதங்களை அளித்து அவர்கள் சண்டையிடக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
பயங்கரவாதிகளிடையே சர்வதேச அளவில் தேடப்பட்டு வரும் இஸ்னிலான் ஹாபிலானும் உள்ளார் என்று நம்புகிறோம். அடுத்த ஓரிரு நாட்களில் மாராவி நகரம் முற்றிலுமாக ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றார் அவர்.
அக்.15-க்குள் மாராவி நகரை ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை என்பதால் தாக்குதல் நடவடிக்கை மேலும் சில நாட்களுக்குத் தொடரும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com