பொருளாதார ஊக்குவிப்புச் சலுகைகள் குறித்து நான் பேசியதே இல்லை: ஜேட்லி திட்டவட்டம்

"சரிவடைந்து வரும் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை சீர்படுத்த, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான சலுகைத் திட்டங்கள் குறித்து நான் ஒருபோதும் பேசியதில்லை' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி
பொருளாதார ஊக்குவிப்புச் சலுகைகள் குறித்து நான் பேசியதே இல்லை: ஜேட்லி திட்டவட்டம்

"சரிவடைந்து வரும் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை சீர்படுத்த, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான சலுகைத் திட்டங்கள் குறித்து நான் ஒருபோதும் பேசியதில்லை' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து இறங்குமுகத்தைக் கண்டு வருகிறது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவாக, 5.7 சதவீதமாக இருந்தது.
இந்தச் சூழலில், சரிந்து வரும் பொருளாதாரத்தை ஊக்குவிக்க, ரூ.40,000 கோடி மதிப்பிலான வரி மற்றும் வட்டி விகிதக் குறைப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் அரசின் கொள்முதல்களை உயர்த்துவது போன்ற பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் உலக வங்கி மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ள நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் வாஷிங்டனில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் சனிக்கிழமை கேட்டனர். அதற்குப் பதிலளித்து அவர் கூறியதாவது:
நான் இதுவரை எங்கும் "பொருளாதார ஊக்குவிப்புச் சலுகைகள்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதே இல்லை. "பொருளாதார நிலவரத்தைப் பொருத்து முடிவுகள் எடுப்போம்' என்றுதான் கூறியிருக்கிறேன்.
உங்களின் சக ஊடகவியலாளர்கள்தான் நான் சொன்னதை "பொருளாதார ஊக்குவிப்பு' என்று அர்த்தம் செய்துகொண்டு செய்தி வெளியிட்டு வருகின்றனர். எனவே, இது தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்பதற்கு பதில் உங்கள் ஊடக நண்பர்களிடமே கேளுங்கள்.
கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவில் பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, நிதிப் பற்றாக்குறை மிக மோசமாக 4.6 சதவீதமாக இருந்தது. தற்போது அந்த நிலைமையிலிருந்து இந்தியப் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக சுதாரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டின் நிதிப் பற்றாக்குறை விகிதத்துடன் ஒப்பிட்டு, தற்போதைய நிலை குறித்து நீங்கள் முடிவுக்கு வரலாம்.
ரிசர்வ் வங்கியைப் பொருத்தவரை, அது மிகவும் தேர்ந்த அனுபவம் பெற்ற ஓர் அமைப்பு ஆகும். பணவீக்கத்தையும் கட்டுப்படுத்த வேண்டும், பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்க வேண்டும் என்பது அந்த அமைப்புக்கு மிக நன்றாகத் தெரியும். அந்த இரு அம்சங்களையும் சமன் செய்து, அதற்கேற்ற முடிவுகளை எடுப்பதில் ரிசர்வ் வங்கிக்கு சிறந்த நிபுணத்துவம் உள்ளது.
பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்த மிகச் சரியான தருணத்தில், பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை பாஜக அரசு மேற்கொண்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் குறுகிய கால நலன்களை விட, நீண்டகால நலன்களைக் கருதியே மேற்கொள்ளப்பட்டன.
இந்தியப் பொருளாதாரத்தில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இதைவிட்டால் வேறு சரியான தருணம் அமைய முடியாது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் குறித்து காங்கிரஸ் கட்சி குறைகூறுவதில் எந்த ஆச்சரியமும் இருக்க முடியாது. காரணம், கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு அந்தக் கட்சியினர் ஒருபோதும் முக்கியத்துவம் அளித்ததில்லை.
இந்தியாவின் பொருளாதாரம் குறித்து தற்போது அமெரிக்காவில் அதிக ஆர்வம் எழுந்துள்ளது. இந்தியாவில் முதலீடு செய்வதற்கு அதிக அமெரிக்கர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அமெரிக்க அரசும், தனியார் நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளன.
எண்ணெய் கொள்முதலுக்கான நிலுவைத் தொகையை அளிப்பது உள்பட ஈரானுடன் இந்தியாவுக்கு பல்வேறு பிரச்னைகள் இருந்து வந்தன. பேச்சுவார்த்தை மூலம் அவை அனைத்தும் தீர்ர்க்கப்பட்டுவிட்டன என்றார் அருண் ஜேட்லி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com