வங்கதேச தலைமை நீதிபதிக்கு எதிரான ஊழல் புகாரை விசாரிக்க அதிபர் உத்தரவு

வங்கதேச உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுரேந்திரகுமார் சின்ஹாவுக்கு எதிராக எழுந்துள்ள ஊழல் புகாரை ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்கும் என்று அந்நாட்டின் சட்ட அமைச்சர் தெரிவித்தார்.

வங்கதேச உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுரேந்திரகுமார் சின்ஹாவுக்கு எதிராக எழுந்துள்ள ஊழல் புகாரை ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்கும் என்று அந்நாட்டின் சட்ட அமைச்சர் தெரிவித்தார்.
அரசுடன் தலைமை நீதிபதிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து நீண்ட விடுப்பில் அவர் வெளிநாட்டுக்குச் சென்ற ஓரிரு நாட்களிலேயே அவர் மீது ஊழல் புகார் எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச சட்ட அமைச்சர் அனிசுல் ஹக் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது:
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராகப் பல முறைகேடுகள் தொடர்பான புகார்கள் அதிபர் அப்துல் ஹமீதிடம் அளிக்கப்பட்டன. கருப்புப் பணம், நிதி முறைகேடு, ஊழல், சட்ட நெறி தவறியது தொடர்பாக 11 புகார்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்தப் புகார்களை விசாரிக்குமாறு ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு அதிபர் உத்தரவிடப்பட்டுள்ளார். 
நாட்டில் அனைவரும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்தான். விசாரணையின் முடிவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுரேந்திரகுமார் சின்ஹா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை அதிபர் முடிவு செய்வார்.
அவருக்கு உடல் நிலை சரியில்லையென்பதால் நீண்ட விடுப்பு வேண்டும் என்று அதிபருக்கு கடந்த அக்.2-ஆம் தேதி கடிதம் எழுதினார். தற்போது உடல் நலக்குறைவு இல்லை என்று கூறியிருப்பது பொய் என்று சட்ட அமைச்சர் அனிசுல் ஹக் தெரிவித்தார்.
இதனிடையே உச்ச நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் குறிப்பிட்டிருப்பது:
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அல்லாத 5 மூத்த நீதிபதிகளை அதிபர் அப்துல் ஹமீத் கடந்த செப்.30-ஆம் தேதி தனது மாளிகைக்கு அழைத்தார். தலைமை நீதிபதி குறித்து எழுப்பப்பட்ட 11 புகார்களைக் குறித்து அவர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, அந்த 5 நீதிபதிகளும் தலைமை நீதிபதியை வீட்டில் சந்தித்து விளக்கம் கேட்டனர். 
அவரால் திருப்திகரமான விளக்கம் அளிக்க இயலாததால், அவருடன் இணைந்து நீதிமன்றத்தில் செயல்பட முடியாது என்று 5 நீதிபதிகளும் தெரிவித்தனர். தான் பதவி விலகத் தயார் என்றும் தனது இறுதி முடிவை அக்.2-ஆம் தேதி தெரிவிப்பதாகவும் தலைமை நீதிபதி அவர்களிடம் கூறினார். 
ஆனால் அக்.2-இல், உடல் நலக் குறைவு காரணமாக ஒரு மாத விடுப்பில் செல்ல அனுமதி கோரும் கடிதத்தை அவர் அதிபரிடம் அளித்தார். அவர் விடுப்பில் செல்ல அதிபர் அனுமதி அளித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளைத் தகுதி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்தத்தை ரத்து செய்து நீதிபதி சுரேந்திரகுமார் சின்ஹா கடந்த ஜூலையில் தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து அரசுக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில், அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். வங்கதேச உச்ச நீதிமன்றத்தின் முதல் ஹிந்து தலைமை நீதிபதி சுரேந்திரகுமார் சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com