வலுவான பாதையில் இந்தியப் பொருளாதாரம்: ஐஎம்எஃப் தலைவர் கிறிஸ்டின் லகார்ட்

இந்தியப் பொருளாதாரம் வலுவான பாதையில் பயணித்து வருவதாக சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) தலைவர் கிறிஸ்டின் லகார்ட் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொருளாதாரம் வலுவான பாதையில் பயணித்து வருவதாக சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) தலைவர் கிறிஸ்டின் லகார்ட் தெரிவித்துள்ளார்.
சில நாள்களுக்கு முன்பு, நடப்பு மற்றும் அடுத்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் ஏற்கெனவே மதிப்பிட்டதைவிட சற்று குறைவாகவே இருக்கும் என்று ஐஎம்எஃப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், லகார்ட் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர், இந்தியப் பொருளாதாரம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
இந்தியாவில் சமீபத்தில் ரூபாய் நோட்டு வாபஸ், சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமல் ஆகிய இரு பெரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக அந்நாட்டுப் பொருளாதாரத்தில் தாற்காலிகமாக சிறிய சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சற்று குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இது மிகக் குறுகிய காலத்துக்கு மட்டுமே நீடிக்கும்.
எதிர்காலத்தில் இந்தியப் பொருளாதாரம் வலுவான பாதையில் பயணிக்கும். இந்தியாவின் நிதிப் பற்றாக்குறையும், பணவீக்கம் குறையும் என்று உறுதியாக நம்புகிறோம். பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளில் மிகப்பெரிய எண்ணிக்கையாக உள்ள இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான் அந்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும் என்றார் அவர்.
முன்னதாக, ஐஎம்எஃப் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2017-ஆம் ஆண்டில் 6.7 சதவீதமாக இருக்கும் என்றும், 2018-ஆம் ஆண்டில் 7.4 சதவீதமாக இருக்கும் என்றும் குறைத்து மதிப்பிடப்பட்டது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் ஐஎஃப் வெளியிட்ட அறிக்கையில், 2017-ல் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.1 சதவீதம் இருக்கும், 2018-ல் 7.7 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
பொது விநியோகத் திட்ட சர்ச்சை: இதனிடையே, இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்துக்கு மாற்றாக அனைவருக்கும் ஊதியம் அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தவில்லை என்று ஐஎம்எஃப் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
இந்தியாவில் ஏற்கெனவே பல்வேறு மானியங்களை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு செலுத்தி வருகிறது. 
இந்நிலையில், பொது விநியோகத் திட்டத்தில் உணவுப் பொருள்களை அரசே வழங்காமல், அனைவருக்கும் ஊதியம் அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த உணவு, தானியத்துக்கான பணத்தை மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டுமென்று ஐஎம்எஃப் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. ஆனால், இது தவறான தகவல் என்று ஐஎம்எஃப் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com