ஆப்கன் ராணுவ முகாமில் தலிபான் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் ராணுவ முகாமில் தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 43 வீரர்கள் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் ராணுவ முகாமில் தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 43 வீரர்கள் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக ஆப்கன் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெளலத் வசீர் தெரிவித்தது: 
தெற்கு மாகாணமான காந்தஹாரில் உள்ள ராணுவ முகாமில் தலிபான் பயங்கரவாதிகளின் தற்கொலைத் தாக்குதல் புதன்கிழமை நடத்தப்பட்டது. வெடிபொருள்கள் நிரப்பிய இரு கார்களை முகாமுக்குள் வேகமாக ஓட்டி வந்து மோதி இந்தத் தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் மறைந்திருந்த மேலும் சில பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். ராணுவ முகாமிலிருந்த வீரர்களும் திருப்பி சுட்டனர். இந்த மோதலில் 43 வீரர்கள் பலியாகினர். ஒன்பது வீரர்கள் காயமடைந்தனர். ஆறு வீரர்களைக் காணவில்லை. ராணுவ முகாம் பலத்த சேதத்துக்கு உள்ளானது. பயங்கரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு தலிபான் பொறுப்பேற்றது என்றார் அவர்.
காவலர்கள் 6 பேர் பலி: ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள பால்க் மாகாணத்தில் புதன்கிழமை இரவு தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல் துறையைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். 
போலீஸார் பயணம் செய்த வாகனத்தை வழி மறித்து பயங்கரவாதிகள் அந்தத் தாக்குதலை நடத்தியதாக காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஷீர்ஜான் துரானி கூறினார்.
இதனிடையே தலிபான் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நாட்டின் பல்வேறு இடங்களில் நடத்திய தொடர் தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 74-ஆக அதிகரித்தது என்று ஆப்கன் உள்துறை இணை அமைச்சர் முராத் அலி முராத் தெரிவித்தார்.
நாட்டின் கிழக்கு, மேற்கு, தெற்குப் பகுதிகளில் உள்ள காவல் துறையினரின் சோதனைச் சாவடிகள், அரசு அலுவலகங்களைக் குறி வைத்து தலிபான் பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர். இதில் 74 பேர் பலியானதுடன் பொதுமக்கள், காவல் துறையினர் உள்பட இருநூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றார் அவர்.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதற்காக நிறுத்தியிருந்த அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளைத் திரும்பப் பெற அமெரிக்கா முடிவு செய்தது. கடந்த 2014-ஆம் ஆண்டு இறுதியில் கூட்டுப் படை வீரர்கள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறினர். பயங்கரவாதிகளுக்கு எதிராக நேரடியாகச் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு, பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பாதுகாப்புப் படையினருக்கு ஆலோசனை வழங்கவும் அமெரிக்காவின் ஒபாமா அரசு முடிவு செய்தது. அமெரிக்காவின் இந்த முடிவுக்குப் பிறகு தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் ஆப்கானிஸ்தானில் அதிகரிக்கத் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com