இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நண்பன் அமெரிக்கா: ரெக்ஸ் டில்லர்ஸன்

சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, இந்தியாவின் மிக நம்பகத்தன்மை வாய்ந்த கூட்டாளி அமெரிக்காவே என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன் கூறியுள்ளார்.

சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, இந்தியாவின் மிக நம்பகத்தன்மை வாய்ந்த கூட்டாளி அமெரிக்காவே என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன் கூறியுள்ளார்.
சர்வதேச எல்லைகள் குறித்த சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் இந்தியாவும், அமெரிக்காவும், சீனாவின் அத்துமீறல்களுக்கு எதிரான மிகச் சிறந்த கூட்டாளிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் முதல் முறையாக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் ரெக்ஸ் டில்லர்ஸன், அதற்கு முன்னதாக இந்தியா தொடர்பான அமெரிக்க அரசின் கொள்கை குறித்து வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவும், சீனாவும் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் அண்டை நாடுகளாக இருந்தாலும், சர்வதேச எல்லைகள் குறித்த சட்டங்களுக்கு சீனா மதிப்பளிப்பதில்லை.
எனினும், இந்தியா போன்ற நாடுகள் அடுத்த நாடுகளின் இறையாண்மையை மதித்து நடந்து வருகின்றன. தென் சீனக் கடலில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சீனா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் இந்தியாவும், அமெரிக்காவும் பெரிதும் மதிக்கும் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை ஆகும்.
சீனாவுடன் ஆக்கப்பூர்வமான நட்புறவையே அமெரிக்கா விரும்புகிறது. எனினும், அண்டை நாடுகளின் இறையாண்மையைக் குலைக்கும் வகையிலும், அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளுக்கு எதிராகவும் சீனா விடுக்கும் சவால்களுக்கு அமெரிக்கா அடிபணியாது.
சீனாவின் நடவடிக்கைகளால் நிச்சயமற்ற தன்மையும், பதற்றமும் நிலவி வரும் இந்தச் சூழலில், இந்தியாவின் மிக நம்பகத்தகுந்த கூட்டாளியாக அமெரிக்கா இருக்கும்.
சர்வதேச சட்டதிட்டங்கள், கடல்வழியைப் பயன்படுத்தும் உரிமை, வர்த்தக உரிமை போன்ற விவகாரங்களில் இந்தியாவும், அமெரிக்காவும் ஒருமித்த நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாலேயே, அண்மைக் காலமாக இரு நாடுகளிடையேயான நல்லறவு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது.
உலக உருண்டையின் எதிரெதிர் பக்கங்களில் இருந்துகொண்டு, உலக ஸ்திரத்தன்மையின் இரு அரண்களாக இந்தியாவும், அமெரிக்காவும் திகழ்கின்றன. குடிமக்களின் வளர்ச்சியிலும், உலக மக்களின் நன்மையிலும் அக்கறை கொண்டுள்ளதில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஒற்றுமை உள்ளது.
வட கொரியாவின் அணு ஆயுதங்கள் மற்றும் தொலைதூர ஏவுகணைகளால் அமெரிக்காவுக்கும், ஆசியாவிலுள்ள அதன் கூட்டாளிகளுக்கும் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியால் சர்வதேச அரசியலில் ஏற்பட்ட சாதகமான சூழலை, வட கொரியாவால் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சுறுத்தல் கெடுத்துள்ளது.
குறைந்தது 100 ஆண்டுகளுக்காவது இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்துவதில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கு பல்வேறு வகையிலும் உதவ அமெரிக்கா முன்வந்துள்ளது. அமெரிக்கா முன்வைத்த யோசனைகள் செயல்வடிவம் பெற்றால் அது உலக அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார் அவர்.
"தைரியமான உரை': இதற்கிடையே, இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவது குறித்து ரெக்ஸ் டில்லர்ஸன் மிக தைரியமாகவும், வெளிப்படையாகவும் உரையாற்றியுள்ளதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் இணையமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார். இவர், முந்தைய ஒபாமா ஆட்சியின்போது வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவின் பொறுப்புகளை கவனித்து வந்தவர் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com