ரோஹிங்கயா பிரச்னைக்கு மியான்மர் ராணுவமே பொறுப்பு: அமெரிக்கா

மியான்மரிலிருந்து ரோஹிங்கயா பிரிவினர் அகதிகளாக வெளியேறி வருவதற்கு அந்நநாட்டு ராணுவமே பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறினார்.
மியான்மரிலிருந்து வெளியேறி வங்கதேசத்தின் பலோங்காலி  அகதிகள் முகாமை நோக்கிச் செல்லும் ரோஹிங்கயாக்கள். நாள்: வியாழக்கிழமை.
மியான்மரிலிருந்து வெளியேறி வங்கதேசத்தின் பலோங்காலி  அகதிகள் முகாமை நோக்கிச் செல்லும் ரோஹிங்கயாக்கள். நாள்: வியாழக்கிழமை.

மியான்மரிலிருந்து ரோஹிங்கயா பிரிவினர் அகதிகளாக வெளியேறி வருவதற்கு அந்நநாட்டு ராணுவமே பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறினார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: 
மியான்மரில் தற்போது ராணுவம் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டு அதிகார முறை உள்ளது. ரோஹிங்கயா விவகாரம் அந்த நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சோதனையாகும். ரோஹிங்கயா பிரிவு மக்கள் லட்சக்கணக்கில் நாட்டைவிட்டு அகதிகளாக வெளியேறி வருவது கவலை அளிப்பதாக உள்ளது.
நான் அரசியல் தலைமையுடன் தொடர்பில் உள்ளேன். அந்த நாட்டுத் தலைவர் ஆங் சான் சூகியுடன் நான் தொடர்பிலிருந்து வருகிறேன். ரோஹிங்கயா அகதிகள் பிரச்னைக்கு மியான்மர் ராணுவம்தான் பொறுப்பேற்க வேண்டும். அப்பிரிவினர் பெரும்பான்மையாக வசித்து வரும் பகுதியில் அவர்களுக்கு எதிராக நடப்பதாகக் கூறப்படும் கொடுமைகளுக்கு ராணுவம் பதில் கூற வேண்டும். நிலைமை சீரடைய அனைத்துத் தரப்பினரும் உரிய நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று நம்புகிறோம். மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெற்றால் உலக நாடுகள் அதைக் கண்டும் காணாததுபோல இருந்துவிட முடியாது.
அதே சமயத்தில் அந்த நாட்டில் உள்ள பயங்கரவாத சக்திகளை அழிக்க அந்நாட்டு பாதுகாப்புப் படைகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்கான நடவடிக்கைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் ராணுவத்தினர் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். 
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சர்வதேசத் தொண்டு அமைப்புகள் செல்வதற்கு அந்த நாட்டு அரசு அனுமதி வழங்க வேண்டும். ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் அங்கு சென்று பார்வையிட்டு முழுமையான அறிக்கை வெளியிட்டால்தான் நம்பகமான தகவல்கள் கிடைக்கும் என்றார்.
ரோஹிங்கயா தீவிரவாதிகள் கடந்த ஆக. 25-ஆம் தேதி மியான்மர் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினர். 
அதைத் தொடர்ந்து ரோஹிங்கயாக்கள் வசிக்கும் பகுதிகளில் ராணுவத்தினர் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். இதனால் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கயாக்கள் அகதிகளாக வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com