ஹஃபீஸ் சயீதின் வீட்டுக் காவல் மேலும் 30 நாள்கள் நீட்டிப்பு

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் சதித் திட்டம் தீட்டியவரும், ஜமாத்-உத்-தவா பயங்கரவாத அமைப்பின் தலைவருமான ஹஃபீஸ் சயீதின் வீட்டுக் காவல் மேலும் 30 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் சதித் திட்டம் தீட்டியவரும், ஜமாத்-உத்-தவா பயங்கரவாத அமைப்பின் தலைவருமான ஹஃபீஸ் சயீதின் வீட்டுக் காவல் மேலும் 30 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஹஃபீஸ் சயீது மற்றும் அவருக்கு நெருக்கமான 4 பேரை அந்நாட்டு அரசு கடந்த ஜனவரி மாதம் முதல் வீட்டுக் காவலில் வைத்துள்ளது. இந்நிலையில், அவர்களது வீட்டுக் காவல் வரும் 24-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இதையொட்டி, அவர்கள் அனைவரையும் லாகூர் உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பஞ்சாப் மாகாண மேல்முறையீட்டு வாரிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு போலீஸார் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தினர்.
அப்போது, அவர்களுடைய வீட்டுக் காவலை மேலும் நீட்டிக்க அனுமதி வழங்குமாறு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தை மேல்முறையீட்டு வாரியம் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தது. அதைத் தொடர்ந்து, அவர்கள் 5 பேரும், நீதிபதிகள் முன்பு வியாழக்கிழமை மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஹஃபீஸ் சயீதுக்கு மட்டும் 30 நாட்கள் வீட்டுக் காவல் நீட்டிக்கப்பட்டது. மற்ற 4 பேருக்கும் வீட்டுக்காவல் நீட்டிக்கப்படவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனினும், அவர்கள் நால்வரும் வேறு வழக்குகளில் போலீஸாரால் காவலில் வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, லாகூர் உயர் நீதிமன்ற வளாகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் ஹஃபீஸ் சயீது உள்பட 5 பேர் மீது அவர்களது ஆதரவாளர்கள் மலர்களைத் தூவி வரவேற்றனர். ஹஃபீஸ் சயீதை பயங்கரவாத குற்றச்சாட்டில் இருந்து பாகிஸ்தான் அரசு சில தினங்களுக்கு முன்பு விடுவித்தது நினைவுகூரத்தக்கது.
ஜமாத்-உத்-தவா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா அறிவித்தது. ஹஃபீஸ் சயீதை தேடப்படும் பயங்கரவாதியாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com