ஆப்கன் மசூதிகளில் குண்டுவெடிப்பு: 63 பேர் சாவு

ஆப்கானிஸ்தானில் இரண்டு மசூதிகளில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதல்களில் 63 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளான மசூதி.
ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளான மசூதி.

ஆப்கானிஸ்தானில் இரண்டு மசூதிகளில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதல்களில் 63 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: காபூலில் ஷியா பிரிவினருக்கு சொந்தமான மசூதியிலும், கோர் மாகாணத்தில் சன்னி பிரிவினருக்கு சொந்தமான மசூதியிலும் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது பயங்கரவாதிகள் இந்த தற்கொலைத் தாக்குதலை நிகழ்த்தினர்.
காபூலில் உள்ள இமாம் ஜமான் மசூதிக்குள் தொழுகையின்போது வெடிகுண்டுகள் பொருத்திய ஆடையுடன் நுழைந்த பயங்கரவாதி அதனை வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தினார். இதில், 30 பேர் உயிரிழந்தனர். மேலும், 45 பேர் பலத்த காயமடைந்தனர். 
கோர் மாகாணம் தே லெய்னா மாவட்டத்தில் உள்ள சன்னி பிரிவினர் மசூதியிலும் இதேபோன்றதொரு தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டபோது நிகழ்த்தப்பட்ட இந்த தற்கொலைத் தாக்குதலில் 33 பேர் இறந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனி வெளியிட்ட கண்டன அறிக்கையில், ஆப்கனைச் சேர்ந்த அனைத்து மதத்தினர் மற்றும் பழங்குடியினரைக் குறிவைக்கும் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
அமெரிக்கா கண்டனம்: ஆப்கானிஸ்தானில் இரு மசூதிகளில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதல் மூடத்தனமான, கோழைத்தனமான செயலாகும். 
இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆப்கன் அரசுக்கும், அதன் மக்களுக்கும் அமெரிக்கா துணை நிற்கும். 
நாட்டில் அமைதியை நிலைநாட்டி, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த லட்சியமிட்டுச் செயல்படும் ஆப்கன் அரசுக்கு அமெரிக்கா எப்போதும்போல் தனது ஆதரவை தொடர்ந்து வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com