ஈரானுடனான உறவுகள் தொடர்பாக இந்தியா சுயமாக முடிவெடுக்க வேண்டும்: அமெரிக்கா

ஈரானுடனான உறவுகள் தொடர்பாக இந்தியா தனது நலன்களின் அடிப்படையில் சுயமாக முடிவெடுக்க வேண்டும் என்று அமெரிக்க அரசின் உயரதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான உறவுகள் தொடர்பாக இந்தியா தனது நலன்களின் அடிப்படையில் சுயமாக முடிவெடுக்க வேண்டும் என்று அமெரிக்க அரசின் உயரதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே சாபஹார் துறைமுகம் தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமர் மோடிக்கும் ஈரான் அதிபர் ஹசன் ரௌஹானிக்கும் இடையே விரிவான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி சாபஹார் துறைமுகத்தின் இரண்டு வளாகங்களை இந்தியா 10 ஆண்டு குத்தகை அடிப்படையில் நிர்வகிக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இதற்கான சாதனங்களின் உரிமையானது இந்தியத் தரப்புக்கு மாற்றித் தரப்படும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, ஈரானில் மதவெறி ஆட்சி நடைபெறுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் குற்றம்சாட்டினார். அந்நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாகவும் அவர் எச்சரித்தார். அதற்கு முன்பு, ஈரானின் ஐஆர்ஜிசி நிறுவனம் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறி அந்த நிறுவனத்தின் மீது அமெரிக்க அரசு இம்மாதத்தொடக்கத்தில் தடை விதித்தது.
இந்நிலையில், இந்திய-ஈரான் உறவு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அரசின் உயரதிகாரி ஒருவர் வாஷிங்டனில் பிடிஐ செய்தியாளருக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஈரானுடனான உறவுகள் தொடர்பாக இந்தியா தனது நலன்களின் அடிப்படையில் சுயமாக முடிவெடுக்க வேண்டும். அதேசமயத்தில், ஈரானில் உள்ள தங்களது வர்த்தகக் கூட்டாளிகள் தொடர்பாக நாடுகள் கடுமையான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். மேலும், இந்த நிறுவனங்களால் பலனடையும் உரிமையாளர்கள் யார் என்பதையும் அந்த நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
தவிர, ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள், ஈரானுடனான பொருளாதார உறவுகள் ஐஆர்ஜிசி நிறுவனத்தை வலுப்படுத்தாமல் இருப்பதையும், பலருக்கும் அது தீங்கிழைப்பதை வலுப்படுத்தாமல் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
பாக்.குடன் அமைதியை விரும்பும் மோடி: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன் அடுத்த வாரம் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் தொடர்பான அமெரிக்க அரசின் கொள்கை குறித்து மேற்கண்ட அதிகாரி தனது பேட்டியில் கூறியதாவது:
இந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புவது அனைவருக்கும் தெரியும். ஆனால், தனது நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான வகையில், பாகிஸ்தானுடன் அவரால் அமைதியைத் தொடர இயலாது. 
எனவே, பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது அவரது மதிப்பீட்டைப் பொறுத்தது என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com