காடலோனியா பிரிவினைவாத அரசைக் கலைக்க ஸ்பெயின் அமைச்சரவை தீர்மானம்

ஸ்பெயினின் தன்னாட்சி மாகாணங்களில் ஒன்றான காடலோனியாவில் ஆட்சிபுரியும் பிரிவினைவாத அரசைக் கலைக்க அந்நாட்டு மத்திய அமைச்சரவை சனிக்கிழமை முடிவு செய்தது.

ஸ்பெயினின் தன்னாட்சி மாகாணங்களில் ஒன்றான காடலோனியாவில் ஆட்சிபுரியும் பிரிவினைவாத அரசைக் கலைக்க அந்நாட்டு மத்திய அமைச்சரவை சனிக்கிழமை முடிவு செய்தது.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு இது குறித்து பிரதமர் மரியானோ ரஜோய் செய்தியாளர்களிடம் கூறியது: 
ஸ்பெயின் அரசியல் சாசனத்தை மீறி காடலோனியா மாகாண அரசு தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளது. இந்த நிலையில், காடலோனியா அரசைக் கலைப்பதைத் தவிர வேறு எந்த வழியும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே ஸ்பெயின் அரசியல் சாசனத்தின் 155-ஆவது பிரிவின்படி காடலோனியா அரசைக் கலைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அமைச்சரவையின் முடிவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று அந்த மாகாண அரசு கலைக்கப்படும். அதன் பிறகு அடுத்த 6 மாதங்களுக்குள் காடலோனியா மாகாண அவைக்கான தேர்தல் நடத்தப்படும். 
அதுவரையில், காடலோனியா மாகாண முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களின் அதிகாரங்கள் பறிக்கப்படும். அவர்களின் அதிகாரங்கள் மத்திய அமைச்சரவைக்கு மாற்றப்படும் என்று கூறினார்.
மாகாண அரசைக் கலைக்கும் அமைச்சரவை முடிவுக்கு ஸ்பெயின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் நடைமுறை நிறைவேற ஒரு வார காலமாகும் என்று கருதப்படுகிறது. ஆளும் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை இருப்பதால், மாகாண ஆட்சிக் கலைப்பு தீர்மானம் சுலபமாக நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
ஸ்பெயினில் உள்ள 17 தன்னாட்சி மாகாணங்களில் காடலோனியாவும் ஒன்று. அங்கு பிரிவினைவாதக் கட்சி கடந்த 2015-இல் ஆட்சிக்கு வந்தது. காடலோனியாவை தனி நாடாக அறிவிக்கும் சட்டத்தை இயற்றுவதற்கு முன்னோடியாக அப்பகுதியில் ஆட்சிபுரியும் பிரிவினைவாதக் கட்சி அரசு கடந்த அக். 1-ஆம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்தியது. 
ஸ்பெயினின் மத்திய அரசு, நீதிமன்றங்கள், மன்னரின் வேண்டுகோள் ஆகியவற்றையும் மீறி பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்தப் பொது வாக்கெடுப்பில் தனி நாடு கோரிக்கைக்கு மக்கள் ஒப்புதல் அளித்துவிட்டதாக காடலோனியா மாகாண அவையில் மாகாண முதல்வர் கார்லஸ் பூட்ஜதமோன் அறிவித்தார். எனினும் அந்த முடிவை நிறுத்தி வைப்பதாகக் கூறினார்.
இந்த நிலையில், காடலோனியா அரசைக் கலைக்கவும், அதன் தன்னாட்சி அதிகாரத்தை ரத்து செய்யவும் மத்திய அமைச்சரவை முடிவு செய்தது.

தனி நாடு கோரிக்கை ஏற்க முடியாதது: ஸ்பெயின் அரசர் பிலிப்

காடலோனியாவின் தனி நாடு கோரிக்கை ஏற்க முடியாதது என்று ஸ்பெயின் அரசர் ஃபிலிப் உறுதிபடக் கூறினார்.
ஸ்பெயினின் உயரிய விருதுகளான அஸ்டூரியாஸ் விருது வழங்கும் விழாவில் ஆற்றிய உரையின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறியதன் விவரம்:
ஸ்பெயினில் ஜனநாயக ஆட்சி முறை என்பது நீண்ட கால போராட்டங்களுக்குப் பிறகு ஏற்பட்டுள்ளது. இதனை உருவாக்கப் பலர் ஒன்று கூடி ஒத்துழைத்துப் போராடியுள்ளனர். பழைய காலத் தவறுகளைத் திருத்திக் கொண்டு வெற்றிகரமாக ஜனநாயகம் செயல்பட்டு வருகிறது. ஏராளமானோரின் தியாகம் மற்றும் ஒத்துழைப்பில் உருவாகிய நமது ஆட்சி முறையை நாம் இழந்துவிடக் கூடாது. ஸ்பெயினில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக, இணைந்து இருக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டு இணக்கமாக வாழ்ந்து வருகிறோம். தற்போது எழுந்துள்ள பிரிவினைவாதம் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஸ்பெயினில் அனைவரும் ஏற்ற சட்ட திட்டங்களை மீறி, எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும் தனி நாடு கோரிக்கை எழுப்புவது ஏற்க முடியாததாகும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com