குல்பூஷண் ஜாதவ் விவகாரம்: சுஷ்மாவுடன் விவாதிக்கவில்லை

குல்பூஷண் ஜாதவ் விவகாரம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் பாகிஸ்தான் தூதர் விவாதிக்கவில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குல்பூஷண் ஜாதவ் விவகாரம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் பாகிஸ்தான் தூதர் விவாதிக்கவில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சோஹைல் மெஹ்மூத், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை கடந்த வாரம் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பின்போது, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்படுவதற்கு, குல்பூஷண் ஜாதவை விடுவிக்க வேண்டும் என்று மெஹ்மூத்திடம் சுஷ்மா ஸ்வராஜ் கேட்டுக் கொண்டதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
ஆனால், அந்தத் தகவல்களை பாகிஸ்தான் மறுத்துள்ளது. இது தொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நஃபீஸ் ஜகாரியா, செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: சுஷ்மா ஸ்வராஜை, சோஹைல் மெஹ்மூத் கடந்த 17-ஆம் தேதி சந்தித்துப் பேசியது உண்மைதான். அண்மையில் தூதர் பொறுப்பை ஏற்றுள்ள சோஹைல் மெஹ்மூத், மரியாதை நிமித்தமாக சுஷ்மாவை சந்தித்துப் பேசினார். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவின் தற்போதைய நிலைமை குறித்து பொதுவாக விவாதித்தனர். குல்பூஷண் விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை. இதுதொடர்பாக, இந்திய ஊடகங்களில் வெளியான தகவல்கள், வெறும் யூகங்களே என்றார் அவர்.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், பயங்கரவாதச் செயல்களைத் தூண்டியதாகவும், இந்தியக் கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதித்தது.
அதையடுத்து, சர்வதேச நீதிமன்றத்தை இந்திய அரசு நாடியது. அந்த நீதிமன்றத்தின் தலையீட்டை அடுத்து, குல்பூஷண் ஜாதவுக்கு நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனையை பாகிஸ்தான் நிறுத்தி வைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com