ரோஹிங்கயா விவகாரம்: மியான்மருக்கு சீனா முழு ஆதரவு

ரோஹிங்கயாக்களுக்கு எதிராக மியான்மர் அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு சீனா முழு ஆதரவு தெரிவித்திருக்கிறது.

ரோஹிங்கயாக்களுக்கு எதிராக மியான்மர் அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு சீனா முழு ஆதரவு தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை இணை அமைச்சர் குவோ யெஜு செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: 
மியான்மரில் நடைபெறும் வன்முறை மற்றும் பயங்கரவாதச் செயல்களுக்கு சீனா கண்டனம் தெரிவிக்கிறது. ராணுவத்துக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல் கண்டனத்துக்கு உரியது.
அந்த நாட்டில் அமைதி நிலவுவதற்காக அரசும் ராணுவமும் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு சீனா முழு ஆதரவு அளிக்கிறது. இந்த விவகாரத்தில் மியான்மருக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாட்டில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவ முறைப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது அரசின் கடமையாகும்.
சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மியான்மர் அரசியல் கட்சிகளுக்கும் இடையே சுமுக உறவு நிலவி வருகிறது. பரஸ்பர உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில் சீனா-மியான்மர் உறவு அமைந்துள்ளது. எந்தப் பிரச்னையானாலும் வெளியார் உதவியின்றித் தாமாகவே அதற்குத் தீர்வு காணும் திறன் அந்நாட்டு மக்களுக்கு உண்டு என்று நம்புகிறோம் என்றார் அவர்.
மியான்மரில் நீண்ட காலமாக வசித்து வரும் ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டதால் அவர்களில் ஒரு பிரிவினர் தீவிரவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மியான்மர் ராணுவ முகாம் மீது ரோஹிங்கயா விடுதலைப் படை தீவிரவாதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் நிகழ்த்திய தாக்குதலுக்குப் பிறகு, ரோஹிங்கயாக்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் ராக்கைன் மாகாணத்தில் ராணுவத்தினரின் தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து ரோஹிங்கயாக்கள் கூட்டங்கூட்டமாக நாட்டைவிட்டு வெளியேறி வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தனர். ஏழு லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கயா முஸ்லிம்கள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது. ரோஹிங்கயா விவகாரத்தில் மியான்மர் அரசுக்குப் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ரோஹிங்கயாக்கள் மீதான தாக்குதலுக்கு மியான்மர் ராணுவம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன் கூறியுள்ளார். இந்த நிலையில், மியான்மர் ராணுவத்தின் செயல்களுக்கு சீனா ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com