பயங்கரவாத அமைப்புகள் மீதான பிரிக்ஸ் பிரகடனத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்

பிரிக்ஸ் பிரகடனத்தை மறுக்கும் விதமாக பாகிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை என அந்நாட்டு அரசு செவ்வாய்கிழமை தெரிவித்தது.
பயங்கரவாத அமைப்புகள் மீதான பிரிக்ஸ் பிரகடனத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்

சீனாவின் ஜியாமென் நகரில் பிரிக்ஸ் அமைப்பின் 9-ஆவது மாநாடு இரு நாட்கள் நடைபெற்றது. 

இந்த மாநாட்டில், பிரேசில் அதிபர் மிச்செல் திமர், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

மாநாட்டின் நிறைவில், 'ஜியாமென் பிரகடனம்' என்ற பெயரில் பிரகடனம் வெளியிடப்பட்டது. 

அதில், தலிபான், ஐ.எஸ்., அல்காய்தா, கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம், உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய இயக்கம், ஹக்கானி குழு, லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது, தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான், ஹிஸ்புல் உத்-தஹ்ரீர் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. 

குறிப்பாக, அந்தப் பிரகடனத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மண்ணில் இருந்து கொண்டு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும் லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது ஆகிய அமைப்புகளின் பெயர்கள் முதல்முறையாக சேர்க்கப்பட்டிருந்தன.

பிரிக்ஸ் மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதப் பிரச்னையை தீவிரமாக எழுப்பினார். இதற்கு பிற நாடுகளின் தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். 

பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் விருப்பம் தெரிவித்தனர். இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.

இந்நிலையில், பிரிக்ஸ் பிரகடனத்தை மறுக்கும் விதமாக பாகிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை என அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் குர்ரரம் தஸ்துகிர் செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பிரிக்ஸ் பிரகடனம் முற்றிலும் தவறானது. அதனை நாங்கள் முற்றிலும் எதிர்க்கிறோம்.

அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 40 சதவீத பயங்கரவாதம் ஆஃப்கானிஸ்தானில் இருந்துதான் நடைபெறுகிறது.

எனவே, இவ்விவகாரத்தில் பாகிஸ்தானை குறை கூறுவதை ஏற்க முடியாது. இந்த பிரகடனத்துக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com