சிறுவயதில் குடியேறியவர்களுக்கான சலுகை: ரத்து செய்ய டிரம்ப் முடிவு

அமெரிக்காவில் சிறு வயதில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு, வளர்ந்த பின்னர் அந்த நாட்டில் பணி செய்வதற்கு அனுமதி அளிக்கும் சட்டத்தை திரும்பப் பெற அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல்கள்

அமெரிக்காவில் சிறு வயதில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு, வளர்ந்த பின்னர் அந்த நாட்டில் பணி செய்வதற்கு அனுமதி அளிக்கும் சட்டத்தை திரும்பப் பெற அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒபாமா ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட அந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்டால், சுமார் 7,000 இந்திய வம்சாவளியினர் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது அமெரிக்க குடியுரிமைச் சட்டங்களில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக, "குழந்தை குடியேற்றவாசிகளுக்கான நிறுத்தி வைக்கப்பட்ட நடவடிக்கை' (டிஏசிஏ) என்ற சட்டம் இயற்றப்பட்டது.
இந்தச் சட்டத்தின்படி, சிறுவயதிலேயே அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்கள், பெரியவர்கள் ஆன பிறகு அமெரிக்க நிறுவனங்களில் பணி புரிவதற்கான அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், டிஏசிஏ சட்டத்தை ரத்து செய்வது குறித்து அதிபர் டிரம்ப் விரைவில் பரிசீலிப்பார் என்று அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.
எனினும், அந்தச் சட்டத்தை ரத்து செய்வது என டிரம்ப் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டதாகவும், அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "பொலிட்டிகோ' ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்தச் சட்டத்தை ரத்து செய்த பிறகு மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து குடியேற்றத் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும், இந்த வார இறுதிக்குள் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் அந்த ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.
டொனால்ட் டிரம்ப்பின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இந்த டிஏசிஏ சட்ட வாபஸ் நடவடிக்கை அறிவிக்கப்பட்டால், அது அவர் சார்ந்துள்ள குடியரசுக் கட்சியிலிருந்தே எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com