லஷ்கர், ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்புகள்: பிரிக்ஸ் மாநாட்டில் தீர்மானம்; பாகிஸ்தானுக்கு பின்னடைவு

பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் பெயர்கள் பிரிக்ஸ் அமைப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்
பிரிக்ஸ் அமைப்பு மாநாட்டின் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்.
பிரிக்ஸ் அமைப்பு மாநாட்டின் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்.

பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் பெயர்கள் பிரிக்ஸ் அமைப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் முதல்முறையாக இடம்பெற்றுள்ளன.
இது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவும், பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட பின்னடைவாகவும் கருதப்படுகிறது.
சீனாவின் ஜியாமென் நகரில் பிரிக்ஸ் அமைப்பின் 9-ஆவது மாநாடு இரு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில், பிரேசில் அதிபர் மிச்செல் திமர், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
மாநாட்டின் நிறைவில், "ஜியாமென் பிரகடனம்' என்ற பெயரில் பிரகடனம் வெளியிடப்பட்டது. அதில், தலிபான், ஐ.எஸ்., அல்காய்தா, கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம், உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய இயக்கம், ஹக்கானி குழு, லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது, தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான், ஹிஸ்புல் உத்-தஹ்ரீர் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக, அந்தப் பிரகடனத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மண்ணில் இருந்து கொண்டு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும் லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது ஆகிய அமைப்புகளின் பெயர்கள் முதல்முறையாக சேர்க்கப்பட்டிருந்தன.
பிரிக்ஸ் மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதப் பிரச்னையை தீவிரமாக எழுப்பினார். இதற்கு பிற நாடுகளின் தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் விருப்பம் தெரிவித்தனர். இதன் பயனாகவே, லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது ஆகிய 2 பயங்கரவாத அமைப்புகளின் பெயர்களும் பிரகடனத்தில் சேர்க்கப்பட்டன. இந்தத் தகவலை இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் பிரீத்தி சரண் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்.
பிரிக்ஸ் அமைப்பின் முந்தைய மாநாடு, கோவாவில் நடைபெற்றபோது வெளியிடப்பட்ட பிரகடனத்தில், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் பெயர்களைச் சேர்ப்பதற்கு இந்தியா தீவிர முயற்சிகள் எடுத்தது. ஆனால், அதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டதால், இந்தியாவின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. எனினும், இந்த முறை அந்த 2 பயங்கரவாத அமைப்புகளின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீதான சீனாவின் கண்ணோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங், பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், "ஆசியப் பிராந்தியத்தில் வன்முறைச் சம்பவங்களில், லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது, ஹக்கானி குழு ஆகியவை ஈடுபட்டுள்ளன; அதனாலேயே பிரிக்ஸ் பிரகடனத்தில் அவற்றின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன' என்றார்.
இதுதொடர்பாக ஜியாமென் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஆசியப் பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலவரமும், தலிபான், ஐ.எஸ்., அல்காய்தா, கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம், உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய இயக்கம், ஹக்கானி குழு, லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது, தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான், ஹிஸ்புல் உத்-தஹ்ரீர் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் தொடர் வன்முறைகளும் கவலையளிக்கின்றன.
அனைத்து வகையிலான பயங்கரவாதத்தையும் பிரிக்ஸ் அமைப்பு கடுமையாகக் கண்டிக்கிறது. பயங்கரவாதத்தின் எந்த வடிவத்தையும் நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோர், பயங்கரவாத அமைப்புகளை ஒருங்கிணைப்போர் அல்லது பயங்கரவாதிகளின் செயல்களை ஆதரிப்போர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை பிரிக்ஸ் அமைப்பு மீண்டும் வலியுறுத்துகிறது.
பயங்கரவாதம் பரவாமல் தடுப்பது, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுதல் ஆகியவை அனைத்து நாடுகளின் பொறுப்பாகும்; சர்வதேச சட்ட விதிகளுக்கு உள்பட்டு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில், சர்வதேச ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். இதில், பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்தல், பிற நாடுகளின் இறையாண்மையை மதித்தல் ஆகியவை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
43 பக்கங்களைக் கொண்ட அந்த பிரகடனத்தில், 17 முறை பயங்கரவாதம் குறித்த கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளுக்கான நிதியுதவி, ஆயுத உதவி உள்ளிட்டவை கிடைப்பது தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாநாட்டில், பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பான சர்வதேச மாநாட்டை நடத்தத் தயாராக இருப்பதாகவும் இந்தியத் தரப்பில் கருத்து முன்வைக்கப்பட்டது.
சீன வல்லுநர்கள் கருத்து: இதனிடையே, லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது, ஹக்கானி குழு உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் பெயர்கள், பிரிக்ஸ் அமைப்பின் பிரகடனத்தில் சேர்க்கப்பட்டிருப்பது பாகிஸ்தானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும் என்றும், இதனால் சீனா-பாகிஸ்தான் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்றும் சீன அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நரேந்திர மோடி, ஜீ ஜின்பிங் இன்று நேரடிப் பேச்சு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் இடையே செவ்வாய்க்கிழமை (செப்.5) இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
சிக்கிம் எல்லையில் உள்ள டோக்கா லாம் பகுதியில் இந்திய-சீன வீரர்கள் சுமார் 2 மாத காலத்துக்கு மேற்கொண்டிருந்த முற்றுகைச் சம்பவத்துக்குப் பிறகு, இரு நாட்டுத் தலைவர்கள் இடையே நடைபெறும் முதல் இருதரப்பு பேச்சுவார்த்தை இதுவாகும்.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கையில், "இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில், பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபரை சந்தித்து பேசவுள்ளார். அப்போது இரு நாடுகள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்துதல் தொடர்பான நடவடிக்கையை எடுப்பது குறித்து தலைவர்கள் ஆலோசிக்கவுள்ளனர்' எனத் தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு, சீனாவில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு, மியான்மர் நாட்டுக்கு பிரதமர் மோடி செல்லவுள்ளார்.


முக்கிய அம்சங்கள்

பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஊழலுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் எடுக்க உறுதி.
சர்வதேச சட்ட விதிகளுக்கு உள்பட்டு, உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்குத் தேவையான பணிகளில் கூட்டாக ஈடுபடுதல்.
குறிப்பிட்ட நாடுகளுக்கு எதிராக தன்னிச்சையான ராணுவ தலையீடு, பொருளாதாரத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு கண்டனம்.
உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு வேதனை தெரிவிப்பதுடன், அனைத்து வகையிலான பயங்கரவாதம், செயல்திட்டங்களுக்கு கண்டனம்.
மதத் தீவிரவாதம், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் அனைத்து நாடுகளும் ஒரே மாதிரியான அணுகுமுறையை கடைப்பிடித்தல்.
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைக்காமல் தடுப்பது, தங்களது மண்ணில் பயங்கரவாத அமைப்புகள் செயல்படாமல் தடுப்பது ஆகியவை அனைத்து நாடுகளின் பொறுப்பாகும்.
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு சர்வதேச அளவில் நேர்மையான கூட்டணியை ஏற்படுத்துவது மற்றும் இதுதொடர்பான ஐ.நா. சபையின் நடவடிக்கையை ஆதரித்தல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com