பயங்கரவாதத்துக்கு நிதி: பாகிஸ்தான் வங்கியை மூடியது அமெரிக்கா

பயங்கரவாதிகளின் நிதிப் பரிமாற்றங்களுக்கு உதவியதாக நியூயார்க் நகரில் இருந்த பாகிஸ்தானின் ஹபீப் வங்கிக் கிளையை அமெரிக்கா அதிரடியாக
பயங்கரவாதத்துக்கு நிதி: பாகிஸ்தான் வங்கியை மூடியது அமெரிக்கா

நியூயார்க்: பயங்கரவாதிகளின் நிதிப் பரிமாற்றங்களுக்கு உதவியதாக நியூயார்க் நகரில் இருந்த பாகிஸ்தானின் ஹபீப் வங்கிக் கிளையை அமெரிக்கா அதிரடியாக மூடியது. மேலும், அந்த வங்கிக்கு ரூ.1,439 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படையினர் மீது தாக்குதல் நடத்தி வரும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சில நாள்களுக்கு முன்பு குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் கராச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாகிஸ்தானின் மிகப்பெரிய வங்கியான ஹபீப் வங்கியின் நியூயார்க் கிளையை அமெரிக்கா மூடிவிட்டது.

இது தொடர்பாக அமெரிக்க நிதித் துறையின் வெளிநாட்டு வங்கிகள் கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

கருப்புப் பணம் உருவாவதைத் தடுப்பது, பயங்கரவாதிகளின் நிதிப்பரிமாற்றத்தை நிறுத்துவது, சட்டவிரோத நிதிப் பரிவர்த்தனைகளைத் தடுப்பது தொடர்பான விதிகளை ஹபீப் வங்கி முறையாகக் கடைப்பிடிக்கவில்லை. எனவே, அந்த வங்கிக் கிளையை மூட முடிவெடுக்கப்பட்டது. அந்த வங்கிக்கு ரூ.1,439 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை 14 நாள்களுக்குள் கட்ட வேண்டும் என்று அந்த அதிகாரிகள் தெவித்தனர்.

இது தொடர்பாக ஹபீப் வங்கி நிர்வாகம் கூறியுள்ளதாவது:
எங்கள் வங்கி மீதான குற்றச்சாட்டுகள் தவறு என்பது விரைவில் நிரூபிக்கப்படும். எங்கள் வங்கி நிதி மற்றும் நிர்வாகரீதியாக பலமாக உள்ளது. எனவே, இப்போதைய சூழ்நிலை விரைவில் மாறும் என்றனர்.

கடந்த 1941-ஆம் ஆண்டு இந்திய முஸ்லிம்களுக்காக  பம்பாய் (மும்பை) நகரைத் தலைமையிடமாகக் கொண்டு ஹபீப் வங்கி தொடங்கப்பட்டது. தேசப் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானின் முதல் தலைநகரான கராச்சிக்கு அந்த வங்கி இடம் மாற்றப்பட்டது. பின்னர் பாகிஸ்தானின் முதன்மையான வங்கியாக உருவெடுத்து பல்வேறு நாடுகளிலும் கிளைகள் அமைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com