இர்மா புயல் மிரட்டல்: கியூபாவிலிருந்து 10,000 சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்

அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகிய கடும் புயலான 'இர்மா'வின் அச்சுறுத்தலையடுத்து கியூபாவின் கடற்கரைச் சுற்றுலாத் தலங்களில் சிக்கிய பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்
இர்மா புயலால் செயின்ட் மார்ட்டின் நகரில் பாதிக்கப்பட்ட வாகனங்கள்.
இர்மா புயலால் செயின்ட் மார்ட்டின் நகரில் பாதிக்கப்பட்ட வாகனங்கள்.

அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகிய கடும் புயலான 'இர்மா'வின் அச்சுறுத்தலையடுத்து கியூபாவின் கடற்கரைச் சுற்றுலாத் தலங்களில் சிக்கிய பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.
கடந்த நூறாண்டு காலத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான மிகக் கடுமையான புயல் என 'இர்மா' குறிப்பிடப்படுகிறது. கரீபியன் தீவுகளைத் தாக்கிய இர்மா புயல் தொடர்ந்து வட மேற்காக அமெரிக்க கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. அதன் சீற்றம் அதிகரித்து வருவதாக அமெரிக்க வானிலை ஆய்வு நிபுணர்கள் தெரிவித்தனர். 
தற்போது புயல் காற்று மணிக்கு 295 கி.மீ. வேகத்தில் வீசி வருகிறது. அத்துடன் பெருமழை பெய்து வருகிறது. 'இர்மா' புயல் கியூபாவை சனிக்கிழமை காலை தாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரீபியன் தீவுப் பகுதிகளான பார்புடா, செயின்ட் மார்ட்டின் உள்ளிட்ட இடங்களில் இர்மா புயல் தாக்குதலுக்கு 12 பேர் பலியாகினர். புயல் மழையால் பெரும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. சுமார் 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். போர்ட்டோ ரிகோ, செயின்ட் கிட்ஸ் போன்ற சர்வதேச சுற்றுலா மையங்களில் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன. தொலைத்தொடர்பு, விமானப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளன. அங்கு இயல்பு வாழ்க்கை திரும்புவதற்குப் பல மாதங்களாகும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இர்மா புயல் ஞாயிற்றுக்கிழமை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, அண்டை மாகாணமான டெக்ஸாஸ், ஹார்வி புயல் தாக்குதலால் பெரும் சேதத்தை எதிர்கொண்டுள்ளது. அதிலிருந்து அமெரிக்கா மீளும் முன்னரே மிக சக்தி வாய்ந்த இர்மா புயல் அடுத்ததாக மிரட்டி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com